மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ரூ.4,800 கோடி!சட்டசபையில் அறிவித்தார் முதல்வர் விஜய்
மீஞ்சூரில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் ரூ.4,800 கோடி!சட்டசபையில் அறிவித்தார் முதல்வர் விஜய்
UPDATED : செப் 02, 2026 07:47 PM
ADDED : செப் 02, 2026 07:33 PM
சென்னை:''மீஞ்சூரில் நாள்தோறும் 40 கோடி லிட்டர் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், 4,800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்,'' என, சட்டசபையில் முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
சட்டசபையில், 110 விதியின் கீழ் முதல்வர் விஜய், வெளியிட்ட அறிவிப்புகள்:
* வடசென்னை, ஆவடி, பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், மீஞ்சூரில் நாள்தோறும் 40 கோடி லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், 4,800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்
* ஆவடி மாநகராட்சியில் அனைத்து வீடுகளுக்கும், 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் வகையில், 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்
* கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறனை அதிகரிக்க, 410 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்
* பெரம்பூர், கொளத்துார், வில்லிவாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டமைப்புகளை மேம்படுத்த, 236 கோடி ரூபாய் செலவிடப்படும்
* சென்னை மாநகராட்சியில் 45 சதுர கி.மீ., பரப்பளவில், 35 கி.மீ., நீளத்திற்கு நவீன சாலைகள் மற்றும் நடைபாதைகள் அமைக்கப்படும். பள்ளிகளை சுற்றி 15 கிலோ மீட்டர் நீளத்திற்கு குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் சாலை வசதிகள் மற்றும் 105 சாலை சந்திப்புகள், 110 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும்
* சென்னை மாநகராட்சியின் உட்கட்டமைப்பு வசதி குறைவாக உள்ள பகுதிகளில் சாலைகள், மழைநீர் வடிகால்கள், தெருவிளக்குகள், நடைபாதைகள், திடக்கழிவு மேலாண்மை வசதிகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் சமுதாய நலக்கூடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு, 100 கோடி ரூபாய் செலவிடப்படும்.
* சென்னையில் பாதாள சாக்கடை பணியில் சேதமடைந்த அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும்.
இவ்வாறு முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
***
