ADDED : ஏப் 14, 2026 11:16 PM

சென்னை: விரைவு ரயிலில், சென்னை சென்ட்ரல் வந்த சேலம் நபரிடம், 53 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டி, பணம் பறிமுதல் செய்யப் பட்டது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய நடைமேடைகளில், ரயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர்.
கோவையில் இருந்து சென்ட்ரல் வந்த விரைவு ரயிலில் வந்து இறங்கிய பயணியரில், சந்தேகத்தின் படி, ஒருவரிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர், அவரது உடைமைகளில் சோதனை செய்தபோது, 289 கிராம் நான்கு தங்கக் கட்டிகள் இருந்தன. இதன் மதிப்பு 45.50 லட்சம் ரூபாய். இதுதவிர, 7.50 லட்சம் ரூபாயும் இருந்தது. இவற்றை எடுத்து வந்தது, சேலத்தைச் சேர்ந்த பத்மநாபன் ஜெயராஜ் 43, என தெரிய வந்தது.
அவை வணிக நோக்கங்களுக்காக எடுத்துச் செல்லப்படுவதாக அவர் கூறியுள்ளார். ஆனால், அதற்குரிய ஆவணங்கள் ஏதும் இல்லை. இதையடுத்து, அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் மற்றும் ரொக்கப் பணம் ஆகியவை வருமான வரித் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கொடுங்கையூர், எம்.கே.பி.நகர் சந்திப்பு பகுதியில், ஒரு காரை வழிமறித்து சோதனையிட்ட போது, 1.39 லட்சம் ரூபாய் இருந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால், கார் ஓட்டி வந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த உதயகுமார், 25, என்பவரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
திரு.வி.க நகர் தொகுதிக்கு உட்பட்ட பேசின்பாலம், யானைகவுனி சாலை அருகே, ஒரு காரில் ஆவணமில்லாத 62,000 ரூபாய் இருந்தது. அப்பணம், தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதலானது.
