தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/மேம்பால ரயில் வழித்தட மேம்பாட்டிற்கு ரூ.6,000 கோடி!விரிவான திட்ட அறிக்கை அரசிடம் சமர்பிப்பு: 'ஏசி' ரயில் இயக்க 'மெட்ரோ' நிறுவனம் முடிவு

மேம்பால ரயில் வழித்தட மேம்பாட்டிற்கு ரூ.6,000 கோடி!விரிவான திட்ட அறிக்கை அரசிடம் சமர்பிப்பு: 'ஏசி' ரயில் இயக்க 'மெட்ரோ' நிறுவனம் முடிவு

மேம்பால ரயில் வழித்தட மேம்பாட்டிற்கு ரூ.6,000 கோடி!விரிவான திட்ட அறிக்கை அரசிடம் சமர்பிப்பு: 'ஏசி' ரயில் இயக்க 'மெட்ரோ' நிறுவனம் முடிவு

2


UPDATED : ஆக 19, 2026 08:56 PM

ADDED : ஆக 19, 2026 08:53 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 19, 2026 08:56 PM ADDED : ஆக 19, 2026 08:53 PM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை கடற்கரை - வேளச்சேரி மேம்பால ரயில் வழித்தடத்தை, 6,000 கோடி ரூபாயில் மேம்படுத்தவும், 'ஏசி' ரயில்களை இயக்கவும், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான விரிவான திட்ட அறிக்கை, மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மேம்பால ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை வரை மூன்று கட்டங்களாக இத்திட்டத்தை நிறைவேற்ற, 1971ல் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ., தீர்மானித்தது.

தெற்கு ரயில்வேயுடன் இணைந்து, முதற்கட்டமாக கடற்கரை -- மயிலாப்பூர் இடையே ரயில் திட்டப்பணிகளும், இரண்டாவது கட்டமாக மயிலாப்பூர் --- வேளச்சேரி இடையே ரயில் திட்டப்பணிகளும், 2007ம் ஆண்டில் முடிக்கப்பட்டன.

வேளச்சேரி -- பரங்கிமலையை இணைக்கும் மேம்பால ரயில் திட்டப்பணி, 2008-ல் தொடங்கப்பட்டது. ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகரில் நிலம் கையகப்படுத்தும் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டு, கடந்த மார்ச் 15 முதல் பயன்பாட்டுக்கு வந்தது.

தற்போது, கடற்கரையில் இருந்து பரங்கிமலைக்கு, 23.98 கி.மீ.,க்கு தினமும், 100 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன; ஒரு லட்சம் பேர் பயணிக்கின்றனர்.

ஆனாலும், இந்த மேம்பால ரயில் நிலையங்கள் படுமோசமாக உள்ளன. சில ரயில் நிலையங்களில், இரவு நேரங்களில் போதிய மின்விளக்கு வசதி, லிப்ட், கழிப்பறை வசதிகள் போதிய அளவில் இல்லை.

இதையடுத்து, இந்த மேம்பால ரயில் தடத்தை, சென்னை மெட்ரோவுடன் இணைக்கும் திட்டத்துக்கு ரயில்வே வாரியம், கடந்த ஆண்டு ஜூலை 31ல், முதற்கட்ட ஒப்புதலை வழங்கியது. இதற்கான இறுதி ஒப்புதலை நேற்று முன்தினம், ரயில்வே அமைச்சகம் அளித்துள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தம், தெற்கு ரயில்வே மற்றும் தமிழக அரசு இடையே கையெழுத்தாகி உள்ளது.

மேம்பால ரயில் சேவையை, மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைப்பதற்கான செலவு, நிதி, ரயில்கள் இயக்கம், நிலம், சொத்து மதிப்பு, வருவாய் பங்கீடு உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்ள, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தயாராகி உள்ளது.

இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குனர் அர்ச்சுனன் நம் நாளிதழுக்கு அளித்த பேட்டி:

சென்னை கடற்கரை - பரங்கிமலை மேம்பால ரயில் சேவையை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைக்க, ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

இருப்பினும், அடுத்த இரண்டு ஆண்டிற்கு, தெற்கு ரயில்வே சார்பில்தான் மின்சார ரயில்கள் இயக்கப்படும். அதற்குள், நாங்கள் மேம்பால ரயில் நிலையங்களை மேம்படுத்த உள்ளோம்.

இதற்காக, ஒவ்வொரு ரயில் நிலையமும், தற்போதுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இணையாக மேம்படுத்தப்படும்.

அதற்கான செலவு, என்னென்ன வசதிகள் ஏற்படுத்துவது, ரயில் நிலையங்களில் உள்புறங்களில் மாற்றம், 'ஏசி, லிப்ட் எனும் மின்துாக்கி, எஸ்கலேட்டர் எனும் நகரும் படிகள், கண்காணிப்பு கேமரா, வாகன நிறுத்த வசதி' போன்ற பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.

இதற்காக, மொத்தம் 6,000 கோடி ரூபாயில் மதிப்பீட்டில், திட்டப்பணிகளை செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரித்து, தமிழக அரசு வாயிலாக, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

இந்த திட்ட அறிக்கைக்கு ஒப்புதலை பெற்று, மத்திய, மாநில அரசின் நிதி உதவிகளோடு, இந்த திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

மேம்பால ரயில் பாதைகள் அகல ரயில் பாதைகள் என்பதால், மெட்ரோ ரயில்களை இயக்க முடியாது. எனவே, இந்த பாதையில் புதிய, 'ஏசி' மின்சார ரயில்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ரயில்கள் பரங்கிமலையில் இருந்து கடற்கரை வரையில் இயக்க உள்ளோம். ஆரம்பத்தில், 10 அல்லது 12 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

பின், பயணியர் தேவையின் அடிப்படையில், உடனுக்குடன் மெட்ரோ ரயில்கள் இயக்க உள்ளோம். இது தவிர, மேம்பால ரயில் நிலைய வளாகங்களில், வணிக வளாகம், பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்டுவரப்படும்.

மேம்பால ரயில் நிலையங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு இணைப்பு சாலைகள் ஏற்படுத்துவதோடு, சிற்றுந்துகள், ஆட்டோ, ஷேர் ஆட்டோ வசதிகளும் ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கட்டணம் நியாயமாக இருக்க வேண்டும் சென்னை போக்குவரத்து விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் ராமாராவ், செயலர் சுப்பிரமணி கூறியதாவது: மேம்பால ரயில் சேவை, மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைக்கும் முடிவை வரவேற்கிறோம். பயணியருக்கான அடிப்படை வசதிகளை, மெட்ரோ ரயில் நிறுவனம் மேம்படுத்தும் என நம்புகிறோம். இதனால், இந்த தடத்தில் வசதிகள் மேம்படும் என்பதால், பயணியர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். சென்னை கடற்கரை -- பரங்கிமலைக்கு இடையே, 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை, மெட்ரோ ரயில்களில் கட்டணத்தை ஒப்பிட்டால் பல மடங்கு குறைவுதான். ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவர் என்பதால், கட்டணத்தை உயர்த்தக் கூடாது. கட்டணத்தை உயர்த்தினாலும், அது நியாயமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us