ரூ.71 லட்சம் தங்கம், வெள்ளி சென்ட்ரலில் பறிமுதல்
ரூ.71 லட்சம் தங்கம், வெள்ளி சென்ட்ரலில் பறிமுதல்
ADDED : மார் 15, 2026 05:21 AM
சென்னை: சென்ட்ரல் ரயில் நிலையத்தில், 63.37 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் 8 லட்சம் மதிப்பிலான வெள்ளி கட்டிகளை, ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ரயில்வே போலீசார் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கர்நாடகா மாநிலம், ஹூப்ளியில் இருந்து சென்ட்ரலுக்கு வந்த விரைவு ரயிலில் இருந்து இறங்கி சென்ற பயணியரின் உடைமைகளை, போலீசார் சோதனை செய்தனர்.
அதில், ஆந்திரா மாநிலம், திருப்பதியைச் சேர்ந்த வெங்கடேஸ்வரலு, 36, என்ற பயணி வைத்திருந்த பையில், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட, 8 லட்சம் மதிப்புடைய, 2.86 கிலோ வெள்ளி கட்டிகள் இருந்தன.
மேலும், அதே ரயிலில் வந்த, ஆந்திரா மாநிலம், புரோட்டாட்டூர் பகுதியைச் சேர்ந்த ஷேக் முனாவர், 60, என்பவர், உரிய ஆவணங்களின்றி, 63.37 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகளை வைத்திருந்தார்.
மொத்தம், 71 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி கட்டிகளை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார், இருவரையும் வருமான வரி துறையினரிடம் ஒப்படைத்தனர்.
