/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பராமரிப்பின்றி பாழாகும் இலவச கழிப்பறைகள் ரூ.260 கோடி வீண்!
/
பராமரிப்பின்றி பாழாகும் இலவச கழிப்பறைகள் ரூ.260 கோடி வீண்!
பராமரிப்பின்றி பாழாகும் இலவச கழிப்பறைகள் ரூ.260 கோடி வீண்!
பராமரிப்பின்றி பாழாகும் இலவச கழிப்பறைகள் ரூ.260 கோடி வீண்!
ADDED : ஜன 12, 2024 11:10 PM

சென்னையில் 260 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட கழிப்பறைகள், பராமரிப்பின்றி அசுத்த நிலையில் காணப்படுகின்றன. தனியார் பராமரிப்பில் உள்ள கழிப்பறைகளிலும் கட்டணம் வசூலிக்கப்படுவதால், பொதுமக்கள் அதிருப்தியடைந்து உள்ளனர்.
சென்னை மாநகராட்சியில், 954 பொது கழிப்பறைகள் உள்ளன. இந்த கழிப்பறைகளை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றின் பராமரிப்புக்கென, தனியாக துாய்மை பணியாளர் நியமிக்கப்பட்டு, ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் செலவிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, மாநகரில் அசுத்தம் ஏற்படுவதை தவிர்க்கவும், துாய்மை இந்தியா திட்டம், மாநகராட்சி, தமிழக அரசு நிதி ஆதாரங்களின் அடிப்படையில், 260 கோடி ரூபாய் மதிப்பில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் கழிப்பறைகள் கட்டப்பட்டன.
மேலும், பழுதடைந்த கழிப்பறைகள் இடிக்கப்பட்டு, அங்கு புதிய கழிப்பறைகளையும் மாநகராட்சி கட்டியுள்ளது.
இந்த கழிப்பறைகள், பேருந்து நிறுத்தங்கள், சந்தை பகுதிகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டப்பட்டு உள்ளன.
முதற்கட்டமாக, ராயபுரம், திரு.வி.க.நகர் ஆகிய மண்டலங்களில் உள்ள கழிப்பறைகள், தேனாம்பேட்டை மண்டலத்தில் மெரினா கடற்கரை கழிப்பறைகளை, ஒன்பது ஆண்டுக்கு தனியார் நிறுவனம் பராமரிக்க, 430 கோடி ரூபாய் மாநகராட்சி வழங்கியுள்ளது.
இதற்கிடையே, புதிதாக கட்டப்பட்டு ஓராண்டுக்கு மேல் ஆன கழிப்பறைகள், பெரும்பாலான இடங்களில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படாமல் உள்ளன.
பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட கழிப்பறைகளுக்கு போதிய அளவு தண்ணீர் இல்லாததால், அவை அசுத்த நிலையில் காணப்படுகின்றன.
மாநகராட்சியில் உள்ள ஒவ்வொரு கழிப்பறைக்கும் தனியாக துாய்மை பணியாளர்கள் இருக்கும் நிலையில், குறிப்பிட்ட கழிப்பறைகள் தவிர, பெரும்பாலான கழிப்பறைகளை மக்கள் பயன்படுத்த முடியாத, அதே நேரம் துர்நாற்றம் வீசும் வகையிலும் உள்ளது.
இது குறித்து, பொதுமக்கள் கூறியதாவது:
கழிப்பறைகள் துவங்கிய போது, தினசரி ஒருவர் துாய்மை பணியில் ஈடுபட்டு வந்தார். இதனால், அப்பகுதி மட்டுமின்றி, அன்றாடம் வருவோரும், சிறுநீர், மலம் கழிக்க கழிப்பறைகளை பயன்படுத்தி வந்தனர்.
நாளடைவில் கழிப்பறைகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு அசுத்த நிலையில் காணப்படுகின்றன.
சில கழிப்பறைகளில், கழிக்கப்பட்ட மலம் அப்படியே இருக்கிறது. வாசல் உட்பட பல இடங்களில் மலம் கழிக்கப்பட்ட நிலையில் உள்ளது.
மாநகராட்சியிடம் பணம் பெற்று துாய்மை பணி மேற்கொள்ளும் தனியார் நிறுவன ஊழியர்கள், கழிப்பறைக்கு வருவோரிடம் ஐந்து ரூபாய் முதல் 10 ரூபாய் வரை, துாய்மை பணியாளர்கள் கட்டணம் வசூலித்து வருகின்றனர்.
சென்னையில், பொது இடங்களில் சிறுநீர் மற்றும் மலம் கழிப்படவில்லை என அறிவித்த மாநகராட்சி, அதன் நிலையை தற்போது கேள்விக்குறியாக்கி உள்ளது.
மாநகராட்சியின் தலைமையிடமான ரிப்பன் மாளிகையில் உள்ள கழிப்பறைகளே, போதிய அளவு துாய்மை பணி மேற்கொள்ளப்படாமல், எப்போதும் துர்நாற்றம் வீசும் அளவில் தான் உள்ளது.
மாநகராட்சியின் அலட்சியத்தால், பொதுமக்கள் சாலையோரங்களில் தான், சிறுநீர், மலம் கழித்து வருகின்றனர்.
ஏற்கனவே, துாய்மை இந்திய நகர பட்டியலில் 44 என்ற நிலையில் சென்னை தொடர்ந்து பின்தங்கி வரும் நிலையில், உரிய பராமரிப்பின்மையால், அசுத்த நகர பட்டியலில் சென்னை இடம்பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், பொங்கல் பண்டிகை முன்னிட்டு, பலரும் ஊருக்கு புறப்பட்டு செல்கின்றனர். அவர்கள் பயன்படுத்தும் வகையில் பொது கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்னையில் உள்ள கழிப்பறைகள் ஒவ்வொன்றும், தினமும் நான்கு முறை துாய்மைப்படுத்தப்பட்டு வருகிறது. கழிப்பறைகளில் குறைகளை தெரிவிக்கவும், கியூ.ஆர். குறியீடு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தனியார் பராமரிப்பில் உள்ள கழிப்பறைகளில் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம்.
புதிதாக இரு இருக்கைகளுடன் கட்டப்பட்ட கழிப்பறைகள் போதிய பராமரிப்பு இல்லாமல் இருப்பது உண்மை தான். அவற்றை மீண்டும் விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
- சென்னை மாநகராட்சி அதிகாரிகள்
- நமது நிருபர் -