/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.44 கோடியில் கட்டிய விடுதியில் வசதியில்லை சைதை எம்.சி., ராஜா மாணவர்கள் போராட்டம்
/
ரூ.44 கோடியில் கட்டிய விடுதியில் வசதியில்லை சைதை எம்.சி., ராஜா மாணவர்கள் போராட்டம்
ரூ.44 கோடியில் கட்டிய விடுதியில் வசதியில்லை சைதை எம்.சி., ராஜா மாணவர்கள் போராட்டம்
ரூ.44 கோடியில் கட்டிய விடுதியில் வசதியில்லை சைதை எம்.சி., ராஜா மாணவர்கள் போராட்டம்
ADDED : டிச 12, 2025 05:08 AM
சென்னை: சைதாப்பேட்டையில் 44.40 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட, எம்.சி., ராஜா சமூக நீதி விடுதியில், அடிப்படை வசதி இல்லை எனக்கூறி, நேற்று முன்தினம் இரவு, மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சைதாப்பேட்டையில் எம்.சி., ராஜா சமூக நீதி விடுதி புதிதாக திறக்கப்பட்டுள்ளது. இந்த விடுதியில் தங்கி, பல்வேறு கல்லுாரிகளில் மாணவர்கள் பயில்கின்றனர்.
இங்குள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் இல்லை என, பல முறை புகார் எழுந்தது.
விடுதி நிர்வாகம் கண்டுகொள்ளாததால், அதிருப்தியடைந்த மாணவர்கள், நேற்று முன்தினம் இரவு, விடுதியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து தகவலறிந்த சென்னை மாவட்ட துணை கலெக்டர், சமரச பேச்சு நடத்தியதையடுத்து, மாணவர்கள் கலைந்து சென்றனர்.
போராட்டம் குறித்து, விடுதி மாணவர்கள் கூறியதாவது:
எம்.சி., ராஜா புதிய விடுதி கட்டடத்தை, முதல்வர் ஸ்டாலின் ஏப்., 14ல் திறந்து வைத்தார். அவர் திறந்து எட்டு மாதங்களாகியும், விடுதியில் பல்வேறு பணிகள் பூர்த்திச் செய்யப்படாமல் உள்ளது.
ரூபாய் 44.4 கோடி செலவில் விடுதி கட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், செலவிட்ட தொகைக்கு ஏற்ப போதுமான வசதிகள் இல்லை.
பழைய எம்.சி., ராஜா விடுதியில் வழங்கப்பட்ட, அதே தரமற்ற உணவு தான் தற்போதும் வழங்கப்படுகிறது. உணவில் புழு, பூச்சி, இரும்பு, பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் கிடப்பது வழக்கமாகி விட்டது.
இது குறித்து, சமையலர் மற்றும் விடுதி நிர்வாகத்திடமும் புகார் அளித்தால் அவர்கள் ஒருமையில் பேசுவதோடு, மிரட்டவும் செய்கின்றனர்.
மொத்தமுள்ள 10 தளங்களில், தளத்திற்கு ஒரு நுாலகம் உள்ளது. ஆனால், அவற்றில் புத்தகம் இல்லை. அதேபோல், விடுதியில் தண்ணீர் பற்றாக்குறை, குறைந்த எண்ணிக்கையிலான கழிப்பறை என, ஏராளமான பிரச்னைகள் உள்ளன.
துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் எங்களுடன் பேச்சு நடத்தி, குறைகளை சரி செய்ய வேண்டும். இல்லை எனில், மாணவர் அமைப்புகளை ஒன்றிணைத்து, அடுத்தக்கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

