/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெட்ரோ திட்ட கழிவு மணல் கட்டுமான பணிக்கு விற்பனை
/
மெட்ரோ திட்ட கழிவு மணல் கட்டுமான பணிக்கு விற்பனை
ADDED : செப் 02, 2025 01:56 AM
சென்னை;சென்னையில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடக்கும் இடங்களில் இருந்து கழிவாக வெளியேற்றப்படும் மணல், கட்டுமான திட்டங்களுக்கு, அதிக விலைக்கு விற்கப்படுவதாக லாரி உரிமையாளர்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.
தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறியதாவது:
சென்னையின் பல்வேறு இடங்களில், மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதில் கழிவாக வெளியேற்றப்படும் மணல், லாரிகள் மூலம் அகற்றப்படுகின்றன.
மெட்ரோ ரயில் திட்ட ஒப்பந்ததாரர் சார்பில், கழிவு மணலை அகற்றும் லாரிகளை கனிமவளத்துறை அதிகாரிகள் பிடிக்கின்றனர். இதனால், எங்களால் பணி செய்ய முடியாத சூழல் ஏற்படுகிறது.
இது மட்டுமின்றி, சென்னையில் மெரினா, அடையார் உள்ளிட்ட கடலோர பகுதிகளில், மெட்ரோ திட்டத்துக்காக பள்ளங்கள் தோண்டுவது மற்றும் சுரங்க பணிகள் நடக்கின்றன.
இதில் கிடைக்கும் கழிவு மணல், ஒரு டன், 28 ரூபாய் விலையில் வழங்கப்படுகிறது.
இவ்வாறு கிடைக்கும் கழிவு மணலை குறைந்த விலைக்கு வாங்கும் சிலர், அதை புறநகரில் நடக்கும் கட்டுமான பணிகளுக்கு, லோடு 20,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை விற்ககின்றனர்.
மெட்ரோ திட்ட பகுதிகளில் இருந்து அகற்றப்படும் மணல் எங்கு செல்கிறது என்பதை, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விசாரித்தால் உண்மை நிலவரம் தெரியவரும். இந்த விபரங்களை தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.