ADDED : ஜூன் 21, 2026 12:23 AM
சென்னை: ''சனாதன தர்மம் என்பது பகுத்தறிவுக்கு புறம்பானதல்ல; அது, ஆழமான தர்க்க அறிவும், ஆன்மிக அறிவியலும் கலந்த ஒரு வாழ்வியல் நெறி,'' என, மூத்த மருந்து மேம்பாட்டு விஞ்ஞானி விஸ்வநாதன் நிரஞ்சன் தெரிவித்தார்.
'சனாதனத்தை பாதுகாத்தல் மற்றும் அடிப்படைகளை தெரிந்து கொள்ளுதல்' எனும் தலைப்பில், சொற்பொழிவு நிகழ்ச்சி, சென்னை, சேத்துப்பட்டில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதில், விஸ்வநாதன் நிரஞ்சன் பேசியதாவது:
நவீன உலகில் சனாதன தர்மத்தின் மீதும், ஹிந்து மதக் கோட்பாடுகள், சடங்குகள் மற்றும் வழிபாட்டு முறைகள் மீதும், பலதரப்பட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இவற்றுக்கு, வெறும் ஆன்மிகக் கதைகளை மட்டும் கூறாமல், இந்திய தர்க்க சாஸ்திர ரீதியாகவும், நவீன அறிவியல் மற்றும் மருத்துவ புரிதலோடும் பதில் அளிக்க வேண்டும்.
கோவில்களுக்கு பதிலாக பள்ளிக் கூடங்களும், மருத்துவமனைகளும் கட்டலாமே என்கின்றனர். சனாதன தர்மம் அவற்றை புறக்கணிக்கச் சொல்லவில்லை. ஆனால், மனிதனுக்கு வாழ்வியல் தேவைகள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அவனது மன அமைதிக்கு, ஆன்மிகத் தேவைகளும் முக்கியம்.
உருவ வழிபாடு மூடநம்பிக்கை என்கின்றனர். ஹிந்துக்கள் சிலைகளை வணங்குவதில்லை; சிலைகளில் இருக்கும் தெய்வீகத் தன்மையை நினைத்து வணங்குகின்றனர்.
உதாரணத்திற்கு, நாம் தேசியக் கொடியை வணங்கும்போது, அந்த துணியில் நம் தாய்நாட்டின் பெருமையை நினைத்து, தேசப்பற்றை வெளிப்படுத்துகிறோம். அதுபோல்தான் சிலைகளும்.ஹிந்து மதம் என்பது சாதியக் கொடுமைகளின் இருப்பிடம் என்கின்றனர். வர்ணம் வேறு; ஜாதி வேறு. வேதங்கள் கூறும் 'வர்ணாசிரமம்' என்பது, பிறப்பு அடிப்படையிலானது அல்ல; அது குணம் மற்றும் செய்யும் செயல்கள் அதாவது கர்மா அடிப்படையிலானது.
சனாதன தர்மத்தின் உண்மையான சாரத்தில், பிறப்பு வழி பாகுபாடுகளுக்கு இடமில்லை. சனாதன தர்மம் என்பது பகுத்தறிவுக்கு புறம்பானதல்ல; அது, ஆழமான தர்க்க அறிவும், ஆன்மிக அறிவியலும் கலந்த ஒரு வாழ்வியல் நெறி.
இவ்வாறு அவர் பேசினார்.
