பணி நிரந்தரத்திற்காக மீண்டும் போராட்டம்: துாய்மை பணியாளர்கள் அறிவிப்பு
பணி நிரந்தரத்திற்காக மீண்டும் போராட்டம்: துாய்மை பணியாளர்கள் அறிவிப்பு
UPDATED : நவ 11, 2026 10:08 PM
ADDED : நவ 11, 2026 09:42 PM

சென்னை: பணி நிரந்தரம் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகள் குறித்து, இரண்டாம்கட்ட பேச்சுக்கு அமைச்சர் அழைக்கவில்லை என்றால், மீண்டும் போராட்டம் நடத்த உள்ளதாக, துாய்மை பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.
உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே, இன்று (நவ.,11) ஆர்ப்பாட்டம் நடந்தது.
துாய்மை பணிகளுக்கான 'அவுட் சோசிங்' முறையை திரும்ப பெறுவதோடு, பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 300க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள், கோஷங்கள் எழுப்பினர்.
அப்போது, இயக்கத்தின் தலைவர் பாரதி பேசியதாவது:
சென்னை, மதுரை உட்பட 21 மாநகராட்சிகளில், துாய்மை பணியாளர்களை 'அவுட்சோசிங்' முறையில் பணியாற்ற, அரசு முனைப்பு காட்டுகிறது. இதற்கான, அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.
துாய்மை பணிகளை தனியாருக்கு விடுவதால், குப்பையை தரம் பிரிப்பது, ஒழுங்காக நடக்கவில்லை. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், அரசு தயாராக இல்லை.
முதல்வர் விஜய், சாத்தியமானதை மட்டும் சொல்லுவேன் எனக்கூறி விட்டு, லட்சக்கணக்கான பணியாளர்களை, கொத்தடிமைகளாக தனியாருக்கு விற்க போகிறாரா; துாய்மை பணியாளர்களை தனியாருக்கு அடமானம் வைக்க போகிறாரா?
எங்களது கோரிக்கைகள் குறித்து, செப்டம்பரில் அமைச்சர்களுடன் சமரச பேச்சு நடத்தியும் பலனில்லை. இரண்டாம் கட்ட பேச்சு அக்டோபரில் நடத்துவதாக தெரிவித்த நிலையில், தற்போது வரை எங்களை அழைக்கவில்லை.
ஒரு வாரத்திற்குள், அமைச்சர் பேச்சு வார்த்தைக்கு அழைக்காவிட்டால், துாய்மை பணியாளர்கள் மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.
