/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வரும் 31 வரை துாய்மை பணியாளர்கள் பணியில் சேர... அவகாசம் நடைபாதையில் போராடுவோரை அகற்ற ஐகோர்ட் உத்தரவு
/
வரும் 31 வரை துாய்மை பணியாளர்கள் பணியில் சேர... அவகாசம் நடைபாதையில் போராடுவோரை அகற்ற ஐகோர்ட் உத்தரவு
வரும் 31 வரை துாய்மை பணியாளர்கள் பணியில் சேர... அவகாசம் நடைபாதையில் போராடுவோரை அகற்ற ஐகோர்ட் உத்தரவு
வரும் 31 வரை துாய்மை பணியாளர்கள் பணியில் சேர... அவகாசம் நடைபாதையில் போராடுவோரை அகற்ற ஐகோர்ட் உத்தரவு
UPDATED : ஆக 14, 2025 11:08 AM
ADDED : ஆக 14, 2025 12:31 AM

சென்னை துாய்மை பணியாளர்களின் போராட்டம் சென்னையில் நேற்று, 13வது நாளாக தொடர்ந்த நிலையில், 'நடைபாதை, சாலையை ஆக்கிரமித்து யாரும் போராட்டம் நடத்த முடியாது. போராட்டக்காரர்களை அங்கிருந்து அதிகாரிகள் அகற்ற வேண்டும்' என, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், தொடர்ந்து போராட்டம் நடக்கும் என, துாய்மைப்பணியாளர்கள் அறிவித்ததால், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பதற்ற நிலை ஏற்பட்டது.
சென்னை மாநகராட்சியில், 10 மண்டலங்கள், அம்பத்துார் மண்டல சில பகுதிகளில், திடக்கழிவு மேலாண்மை பணியை மேற்கொள்ள, 2020ல் தனியார் நிறுவனங்களிடம் மாநகராட்சி ஒப்படைத்தது.
இதைத்தொடர்ந்து, ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் குப்பை கையாளும் பணி தனிாரிடம் ஒப்படைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆக., 1ம் தேதி முதல் துாய்மை பணியாளர்கள் ரிப்பன் மாளிகை முன், பூந்தமல்லி நெடுஞ்சாலை நடைபாதையில் கூடாரம் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரபலங்கள் ஆய்வு ஆரம்பத்தில் துாய்மை பணியாளர்கள் மட்டுமே போராடிய நிலையில், அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவால் போராட்டம் பெரிதானது. தொடர்ந்து பல்வேறு கட்சியினர், சினிமா பிரபலங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதனால், போராட்டத்திற்கு தீர்வு காண, அமைச்சர்கள், எட்டு முறைக்கு மேல் பேச்சு நடத்தியும் தோல்வியில் முடிந்தது. போராட்டம் நேற்று, 13வது நாளாகவும் தொடர்ந்தது.
இந்நிலையில், சென்னை பாரிமுனையை சேர்ந்த தேன்மொழி என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனு:
நடைபாதையை ஆக்கிரமித்து போராட்டம் நடத்துவதால், பொதுமக்களுக்கு கடும் சிரமம் ஏற்படுகிறது. எனவே, அனுமதியின்றி ரிப்பன் மாளிகை முன் உள்ள நடைபாதையில் போராட்டம் நடத்துவோரை கலைந்து செல்ல அனுப்பிய நோட்டீசை, பெரியமேடு போலீசார் செயல்படுத்த உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வி.ராகவாச்சாரி, வழக்கறிஞர் எஸ்.வினோத் ஆஜராகினர்.
அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் உரிமையை மறுக்க முடியாது. இருப்பினும், போராட்டம் அமைதியான முறையில் நடைபெறுவதையும், சட்டங்களை மீறாமல் இருப்பதையும், போராட்டத்தில் ஈடுபடுவோரும், அதிகாரிகளும் உறுதி செய்ய கடமைப்பட்டு உள்ளனர்.
நடைபாதை, சாலையை ஆக்கிரமித்து போராட்டம் நடத்த முடியாது. அவ்வாறு இருப்பின், சட்டப்படி அவர்களை அங்கிருந்து அதிகாரிகள் அகற்ற வேண்டும். அவர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை, காவல் துறையினர் கட்டுப்பாட்டுடன் செயல்படுத்த வேண்டும்.
அரசுக்கு முறையாக விண்ணப்பித்து, அனுமதி பெற்று, ஒதுக்கப்பட்ட இடத்தில் போராட்டம் நடத்தலாம். மனு முடித்து வைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில், துாய்மை பணிகளை தனியாருக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், உழைப்போர் உரிமை இயக்கம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு, நீதிபதி கே.சுரேந்தர் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில், 'மாநகராட்சி நடவடிக்கையால், 2,000 துாய்மை பணியாளர்கள் வேலை பறிபோகும் நிலை உருவாகி உள்ளது. 15 ஆண்டுகள் பணியாற்றியவர்களை குப்பையை போல துாக்கி வீசக்கூடாது' என வாதிடப்பட்டது.
பணி பாதுகாப்பு தமிழக அரசு தரப்பில், 'பணியாளர்களுக்கு ஒப்பந்ததாரர் வாயிலாக பணி வழங்கப்படும். வருங்கால வைப்பு நிதி, இன்சூரன்ஸ் உள்ளிட்ட சலுகைகளுடன் பணி பாதுகாப்பு வழங்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டது.
ஒப்பந்த நிறுவனம் தரப்பில், 'இதுவரை, 341 பணியாளர்கள் பணிக்கு வந்துள்ளனர். மொத்தம், 1,900 பேர் தேவை. பணியில் சேர்வதற்கான அவகாசத்தை, ஆக., 31 வரை நீட்டிக்க தயார்' என, தெரிவிக்கப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனு மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தார்.
இந்நிலையில், நடைபாதையை ஆக்கிரமித்து போராட்டம் நடத்தும் துாய்மை பணியாளர்களை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், சுமுக பேச்சில், அவர்களை வெளியேற்றுவதற்காக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு நேற்று மதியம் 1:00 மணிக்கு பேச்சுக்கு அழைத்தார்.
ஆனால், துாய்மை பணியாளர்கள் பேச்சுக்கு தயாராக இல்லை. மூன்று மணி நேர காத்திருப்புக்கு பின், அமைச்சர்கள் நேரு, சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோருடன் போராட்டக்காரர்கள், 15 நிமிடம் பேசினர். அதிலும், சுமுக தீர்வு ஏற்படவில்லை.
நீதிமன்ற உத்தரவுபடி, துாய்மை பணியாளர்களை கைது செய்து வெளியேற்ற, போலீசார் நடவடிக்கை எடுத்தனர். பிற்பகல் 2:00 மணி முதல், பூந்தமல்லி நெடுஞ்சாலையில், வாகனங்கள் சென்ட்ரலில் இருந்து எழும்பூர் செல்லும் பாதையில் திருப்பி விடப்பட்டன.
எழும்பூரில் இருந்து சென்ட்ரல் நோக்கி செல்லும் பாதை மூடப்பட்டது. அதன் இணைப்பு சாலைகளிலும் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டன. பின், போலீசார் குவிக்கப்பட்டதால் மாலை 6:00 மணியளவில் கடும் பதற்றம் ஏற்பட்டது. இப்பிரச்னையால், பல பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது.
பணியில் சேர அறிவுரை:
துாய்மை பணியாளர்கள் கோரிக்கை, ஒவ்வொரு நாளும் மாறுப்பட்டு வருகிறது. பணி பாதுகாப்பு கேட்டனர். அவற்றை உறுதி செய்துள்ளோம். இந்த பணியாளர்கள் ஆக., 31க்குள் பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் போராட்டம் நடத்தக்கூடிய இடம் ரிப்பன் மாளிகை இல்லை. எனவே, அவர்களை அப்புறப்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலீசாரிடம் முறையான அனுமதியை பெற்று போராட்டம் நடத்த வேண்டும். அவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்தி உள்ளோம்.
-ஆர்.பிரியா,
மேயர் சென்னை மாநகராட்சி
போராட்டம் தொடரும்:
அமைச்சர்களுடன் நடந்த பேச்சில் உடன்பாடு ஏற்படவில்லை. கோரிக்கைகளுக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை. ஆணவ திமிரில், அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளனர். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற, தி.மு.க., அரசு தவறிவிட்டது. எங்களது, போராட்டம் தொடர்ந்து நடக்கும்.
- பாரதி, தலைவர் உழைப்போர் உரிமை இயக்கம்