/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிரெடிட் கார்டு தகவல் தராததால் எஸ்.பி.ஐ., இழப்பீடு தர உத்தரவு
/
கிரெடிட் கார்டு தகவல் தராததால் எஸ்.பி.ஐ., இழப்பீடு தர உத்தரவு
கிரெடிட் கார்டு தகவல் தராததால் எஸ்.பி.ஐ., இழப்பீடு தர உத்தரவு
கிரெடிட் கார்டு தகவல் தராததால் எஸ்.பி.ஐ., இழப்பீடு தர உத்தரவு
ADDED : நவ 04, 2024 04:46 AM
சென்னை:வாடிக்கையாளர் கோரிய விபரங்களை வழங்காத எஸ்.பி.ஐ., கிரெடிட் கார்டு நிறுவனம், பாதிக்கப்பட்டவருக்கு, 12,000 ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, செம்பியத்தைச் சேர்ந்த ஜி.தேவராஜன் என்பவர் தாக்கல் செய்த மனு:
நான், 2000ம் ஆண்டு முதல் எஸ்.பி.ஐ., கிரெடிட் கார்டு பயன்படுத்தி வருகிறேன். 2020 செப்., 1ல், கார்டில் உள்ள 27 'ரிவார்டு பாயின்ட்' குறித்த விபரங்களை, ஆர்.டி.ஐ., எனும் தகவல் அறியும் சட்டம் வாயிலாக கேட்டு, எஸ்.பி.ஐ., கார்டுகள் மற்றும் பேமென்ட் சர்வீசஸ் நிறுவனத்திடம் விண்ணப்பித்தேன்.
அதற்கு தகவல்களை வழங்க முடியாது என, செப்., 17ல் கடிதம் வாயிலாக பதிலளித்தது. மேல்முறையீடு செய்தும், எஸ்.பி.ஐ., கார்டு நிர்வாகம் தரப்பில், இதுவரை விபரங்கள் வழங்கவில்லை.
கோரப்பட்ட விபரங்களை வழங்காமல், மன உளைச்சலை ஏற்படுத்திய, எஸ்.பி.ஐ., கார்டுகள் மற்றும் பேமென்ட் சர்வீசஸ் நிறுவனம், 9.8 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மனுவை, சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் டி.கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன் மற்றும் வி.ராமமூர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்து பிறப்பித்த உத்தரவு:
'ஆர்.டி.ஐ., சட்டம் பொருந்தாது என்பதால், கோரப்பட்ட தகவல்களை வழங்க இயலாது. புகார்தாரரின் கார்டு செயலற்ற நிலையில் உள்ளது.
'மேலும், 4.58 லட்சம் ரூபாய் வரை நிலுவை உள்ளதால், அதை விரைவில் செலுத்தும்படி கோரப்பட்டது' என, எஸ்.பி.ஐ., கார்டு பதிலளித்துள்ளது.
நிலுவை தொகை விவகாரத்தில், இந்த ஆணையம் செல்ல விரும்பவில்லை. ஆர்.டி.ஐ., பொருந்தாது என்ற காரணத்துக்காக தகவலை வழங்க மறுத்தாலும், புகார்தாரர் போன்ற வாடிக்கையாளர் கோரும் விபரங்களை வழங்குவது, சேவை வழங்குவரின் கடமை.
எனவே, புகார்தாரர் கோரிய தகவலை வழங்காமல், சேவை குறைபாடுடன் நடந்து, மன உளைச்சலை ஏற்படுத்திய எஸ்.பி.ஐ., கார்டு நிறுவனம், 12,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். வாடிக்கையாளர் கோரிய தகவல்களை ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.