
சென்னை,சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் உள்ள வனவாணி மேல்நிலை பள்ளியின், 62 வது ஆண்டு விழா, இங்குள்ள மாணவர்கள் கலாசார அரங்கில் நடந்தது.
பள்ளியின் பொறுப்பு முதல்வர் பிரின்சி டாம் ஆண்டறிக்கை வாசித்தார். சென்னை ஐ.ஐ.டி.,யின் தொழில் ஆலோசனை மற்றும் ஆய்வுத்துறை டீன், பேராசிரியர் மனு சந்தானம் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கடந்தாண்டு நடந்த தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
அவர் பேசுகையில்,''மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்பது, அவர்களது மன மற்றும் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் பயனளிக்கும். எதிர்கால சவால்களை எதிர்கொள்வதில் மாணவர்கள் ஆர்வமாக இருக்க வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி நிர்வாக குழு தலைவரும், ஐ.ஐ.டி., பேராசிரியருமான தனவேல், செயலர் ரமன் குமார், துணை முதல்வர் அகிலாண்டேஸ்வரி உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர்.