அறிவியல் புது தொழில்நுட்பங்களை பார்வையிட்ட மாணவ- – மாணவியர்
அறிவியல் புது தொழில்நுட்பங்களை பார்வையிட்ட மாணவ- – மாணவியர்
ADDED : செப் 28, 2026 07:53 PM
சென்னை: சி.எஸ்.ஐ.ஆர்., வளாகத்தில் உள்ள அறிவியல் கண்டுபிடிப்புகளை, மாணவ – மாணவியர் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வுக்குழுமமான சி.எஸ்.ஐ.ஆர்., நாட்டின் அறிவியல் மற்றும் தொழில் வளர்ச்சியில் முன்னணி வகிக்கும் அமைப்பாகும்.
சென்னை, தரமணியில் உள்ள சி.எஸ்.ஐ.ஆர்., வளாகத்தில் 85-வது நிறுவன தினத்தை முன்னிட்டு, செப்., 28ம் தேதி திறந்தவெளி நாள் அனுசரிக்கப்பட்டது.
மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆய்வகங்களைப் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் குறித்து விளக்கப்பட்டது.
நிகழ்ச்சியை, சி.எஸ்.ஐ.ஆர்., இயக்குநர் ஆனந்தவள்ளி தொடக்கி வைத்தார். சர்வே கன்ட்ரோல்ட், எலக்ட்ரோ – ஹைட்ராலிக் அக்சுவேட்டர்கள், 3டி சென்சர் பிரின்டர், பூகம்ப சோதனை, எகு கட்டமைப்பு, கட்டட தொழில்நுட்பம் போன்ற ஆய்வகங்களை பார்வையிட்டனர். பின், ஆராய்ச்சியாளர்களுடன் உரையாடல் நடத்தினர். இதில் மாணவ – மாணவியர் மற்றும் பொதுமக்கள் 12,500 பேர் பங்கேற்று, ஆய்வகங்களை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
ஆர்க்கிடெக் மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். கட்டடம் கட்டுவதற்கான புதிய தொழில்நுட்பத்தை எப்படி பயன்படுத்துவது, அதன் தரம், உழைக்கும் காலம் போன்றவற்றை, ஆய்வகங்களில் நேரடியாக பார்க்க முடிந்தது. மனப்பாட படிப்பை கடந்து, எளிதில் புரியும் வகையில் புதிய கண்டுபிடிப்புகளை, புதிய கோணத்தில் அறிந்து கொண்டேன். – ஜூபைர், 20, தனியார் ஆர்க்கிடெக் கல்லுாரி, ராயப்பேட்டை.
கட்டடம் கட்டும் முன் காற்றின் திசையை கண்டறிய வேண்டிய அவசியத்தை, ஆய்வகத்தில் நுட்பமான முறையில் விளக்கினர். மறுசுழற்சி பொருட்களால் கட்டடம் கட்ட முடியும் என்பதை விரிவாக அறிந்தேன். புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் விதம், எளிதில் புரியும் வகையில் விளக்கியது பயனுள்ளதாக இருந்தது. – லத்திகா, 20, தர்மாம்பாள் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரி, தரமணி
