தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ எண்ணுார் முதல் பூஞ்சேரி வரை 92 கி.மீ., துாரம்... கடல் வழி மேம்பாலம் மூன்று கட்டமாக ரூ.27,600 கோடியில் அமைக்க திட்டம்

எண்ணுார் முதல் பூஞ்சேரி வரை 92 கி.மீ., துாரம்... கடல் வழி மேம்பாலம் மூன்று கட்டமாக ரூ.27,600 கோடியில் அமைக்க திட்டம்

எண்ணுார் முதல் பூஞ்சேரி வரை 92 கி.மீ., துாரம்... கடல் வழி மேம்பாலம் மூன்று கட்டமாக ரூ.27,600 கோடியில் அமைக்க திட்டம்


ADDED : ஜூன் 17, 2025 11:53 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2025 11:53 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், சென்னை எல்லை சாலை திட்டப்பணிகள் துவங்கியுள்ள நிலையில், எண்ணுார் முதல் மாமல்லபுரம் பூஞ்சேரி வரை, 27,600 கோடி ரூபாயில், 92 கி.மீ., துாரத்தில் கடல் மார்க்கமாக, 'இ.சி.ஆர்., கடல்வழி மேம்பாலம்' அமைக்க, மாநில நெடுஞ்சாலை ஆணை யம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க, 3.80 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.

சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், தொழில் நிறுவனங்கள் பெருகி வருவதால், வெளி மாநிலம், தமிழகத்தின் இதர மாவட்டங்களில் இருந்து, வேலை தேடி வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனால், வாகன போக்குவரத்து அதிகரிப்பதால், தற்போதுள்ள சாலைகளை அகலப்படுத்துவது மற்றும் புதிய சாலைகளை உருவாக்குவதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

சென்னையை பொறுத்தமட்டில், வண்டலுார் - மீஞ்சூரை இணைக்கும் வகையில், 62 கி.மீ., துார வெளிவட்ட சாலை, சாலை மேம்பாட்டு நிறுவனம் பராமரிப்பில் உள்ளது.

பெருங்களத்துார் - புழல் பகுதியை இணைக்கும் வகையில், 32 கி.மீ., துாரத்தில் உள்ள சென்னை பைபாஸ் சாலை, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் உள்ளது.

மேலும், மணலி முதல் கோயம்பேடு வழியாக வேளச்சேரி வரை, 25 கி.மீ., உள்வட்ட சாலை, மாநில நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ளது. இந்த சாலைகள், சென்னையில் உள்ள அனைத்து வழித்தடங்களையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளன.

அதேபோல், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தை இணைக்கும் வகையில், எண்ணுார் முதல் தச்சூர், தண்டலம், ஸ்ரீபெரும்புதுார், சிங்கபெருமாள்கோவில் வழியாக, மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி வரை, 133 கி.மீ., துாரத்தில் சாலை மார்க்கமாக ஆறு வழி 'சென்னை எல்லை சாலை' திட்டம் துவக்கப்பட்டுள்ளது.

ஐந்து பிரிவுகளாக பிரிந்து பணி நடைபெற உள்ள நிலையில், மூன்று பிரிவுகளுக்கு, 2,700 கோடி ரூபாயில் பணி துவங்கியது.

புது திட்டம்


இந்நிலையில், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தை இணைக்கும் வகையில், எண்ணுார் முதல் பூஞ்சேரி வரை, 92 கி.மீ., துாரத்தில் கடல் வழி சாலை அமைக்க, தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுஉள்ளது.

இத்திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க, 3.80 கோடி ரூபாய் தமிழக அரசு ஒதுக்கி உள்ளது. இது தொடர்பாக நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இத்திட்டத்திற்கு தோராயமாக, 27,600 கோடி ரூபாய் செலவாகும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இச்சாலைக்கு, 'இ.சி.ஆர்., கடல்வழி மேம்பாலம்' என பெயரிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், இ.சி.ஆர்., என்ற கிழக்கு கடற்கரை சாலை முக்கிய வழித்தடமாக உள்ளது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை இடையே, சாலையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு, மாமல்லபுரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்குவழி சாலை பணிகள் நடந்து வருகின்றன.

நாகப்பட்டினத்தில் இருந்து கன்னியாகுமரி வரை அகலப்படுத்தப்பட உள்ளது. இதனால், சென்னை மற்றும் துாத்துக்குடி துறைமுகங்கள் முன்னேற்றம் ஏற்படுவதுடன், கடலோரப் பகுதிகளின் வளர்ச்சி அதிகரிக்கும்.

மேலும், சென்னை - திருச்சி, சென்னை - சேலம் பசுமை வழி சாலைகள் அமைக்க உள்ளதுடன், இந்த சாலைகளை மதுரை வழியாக துாத்துக்குடி வரை நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த வழித்தடங்களுக்கு, இ.சி.ஆர்., கடல்வழி மேம்பாலம் மிகவும் பயனளிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்வளம் பெருகும்


இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கடலோர பகுதியில் அமைப்பதால் கடல்வளம் பாதிக்காத வகையில், புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, மேம்பாலம் அமைக்கும் வகையில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்படும்.

இச்சாலை, கடல்வழி மேம்பாலமாக அமைப்பதால், கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மீன்வளம், மீனவர்கள் நலனை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு, கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல் தேவை.

ஏற்கனவே, பல நாடுகளிலும், மும்பையிலும் கடல்வழி மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. அதை முன்னுதாரணமாக எடுத்து, இ.சி.ஆர்., கடல்வழி மேம்பாலம் அமைக்க திட்டமிட்டுள்ளோம்.

இச்சாலையால், துறைமுகங்களில் சரக்கு கப்பல் போக்குவரத்து அதிகரிப்பதுடன், தொழில் வளம் பெருகும். சென்னை சாலைகளில் வாகன நெரிசல் கணிசமாக குறையும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மூன்று கட்ட பணிகள்

மதிப்பீடு விபரம் (கோடி ரூபாய்)முதற்கட்டம் 5,4002ம் கட்டம் 9,0003ம் கட்டம் 13,200மொத்தம் 27,600



ரேடியல் சாலையை இணைக்க முடிவு

எண்ணுார் முதல் பூஞ்சேரி வரை அமைய உள்ள இ.சி.ஆர்., கடல்வழி மேம்பாலத்துடன், சென்னை துறைமுகம் மற்றும் பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கூடுதலாக, ஏதாவது சாலைகளை இணைக்க முடியுமா எனவும் ஆய்வு செய்ய உள்ளனர்.



- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us