/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ. 1.17 கோடி ஆன்லைன் டிரேடிங் மோசடி வழக்கில் ஏழு பேர் கைது
/
ரூ. 1.17 கோடி ஆன்லைன் டிரேடிங் மோசடி வழக்கில் ஏழு பேர் கைது
ரூ. 1.17 கோடி ஆன்லைன் டிரேடிங் மோசடி வழக்கில் ஏழு பேர் கைது
ரூ. 1.17 கோடி ஆன்லைன் டிரேடிங் மோசடி வழக்கில் ஏழு பேர் கைது
ADDED : மே 09, 2025 12:49 AM

ஆவடி,அம்பத்துார் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி, 64. கடந்த ஜனவரி மாதம் இறுதியில் அவரது 'வாட்ஸாப்' எண்ணிற்கு, 'ஷவ்ஹான் எட்ஜ்' என்ற பெயரில் ஆன்லைன் டிரேடிங் விளம்பரம் ஒன்று வந்துள்ளது. அதில் கொடுக்கப்பட்டு இருந்த எண்ணில், ராமசாமி தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, 'ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும்' என, மர்ம நபர்கள் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அதன்படி, முதலில் 350 ரூபாய் முதலீடு செய்த போது, அவரது வங்கி கணக்கிற்கு 100 ரூபாய் கமிஷன் தொகை வந்துள்ளது. அதை நம்பி, மர்ம நபர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு சிறுக சிறுக 1.04 கோடி ரூபாய் வரை அனுப்பியுள்ளார். ஆனால், கமிஷன் தொகையை எடுக்க முடியவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
அதே போல திருவள்ளூர், புதுார் பகுதியைச் சேர்ந்த தெய்வ ராணி, 33 என்பவருக்கும் ஜனவரி மாதம் இறுதியில் வாட்ஸாப் எண்ணிற்கு, 'ஷவ்ஹான் எட்ஜ்' என்ற பெயரில் அதே ஆன்லைன் டிரேடிங் விளம்பரம் வந்துள்ளது. அவரிடமும் மர்ம நபர்கள் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அதன்படி, மர்ம நபர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு 13.59 லட்சம் வரை தெய்வராணி அனுப்பியுள்ளார். அவருக்கும் பணம் கிடைக்கவில்லை.
ராமசாமி, தெய்வ ராணி இருவரும் கடந்த பிப்., மாதம் ஆவடி மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையில் தனிப்படை போலீசார் விசாரித்தனர்.
விசாரணையில், குன்றத்துாரைச் சேர்ந்த சேகர், 53, சாலிகிராமத்தைச் சேர்ந்த ஜெயபிரகாஷ், 35, விழுப்புரம், சாத்தபுத்துார் பகுதியைச் சேர்ந்த சுகேந்திரன், 36, கடலுார் மாவட்டம், குஞ்சமேடைச் சேர்ந்த இளையராஜா, 42, பெரம்பலுார் மாவட்டத்தைச் சேர்ந்த அன்வர் பாஷா, 29, மதுரையைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா, 46 மற்றும் கோயம்புத்துாரை சேர்ந்த சுபின், 27 ஆகியோர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள் போலி ஆவணங்களை தயாரித்து, பல்வேறு வங்கி கணக்கு வாயிலாக மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து, ஏழு பேரையும் கைது செய்த போலீசார், பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நேற்று முன்தினம் சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து, 12 மொபைல் போன், இரண்டு லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
தலைமறைவாக உள்ள மற்றவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.