பாதாள சாக்கடை அடைப்பால் கழிவுநீர் வெளியேறி சீர்கேடு
பாதாள சாக்கடை அடைப்பால் கழிவுநீர் வெளியேறி சீர்கேடு
ADDED : மார் 26, 2026 05:46 PM

சாந்தோம்: பாதாள சாக்கடையில் அடைப்பு வெளியேறும் கழிவுநீரால், சாந்தோம் பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவும் அபாயம் நிலுவகிறது.
தேனாம்பேட்டை மண்டலம் சாந்தோமில், வெங்கடேச தெரு உள்ளது. இங்குள்ள பாதாள சாக்கடையில், மூன்று நாட்களுக்கு முன் அடைப்பு ஏற்பட்டு, சாலையில் மலம் கலந்த கழிவுநீர் தொடர்ந்து வெளியேறி வருகிறது.
இதனால் அவ்வழியாக நடந்து செல்வோர், மூக்கை பிடித்தபடி செல்ல வேண்டி உள்ளது. தவிர, தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது.
இதுகுறித்து அப்பகுதிமக்கள், குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்பகுதியில் மழைநீர் வடிகால்வாய் பணி நடப்பதால், உரிய நடவடிக்கை எடுக்காமல், வாரிய அதிகாரிகள் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகின்றனர்.
அதிகாரிகளின் அலட்சியத்தால், மழைநீர் வடிகால்வாய் முழுதும் கழிவுநீர் தேங்கி உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதாள சாக்கடை அடைப்பை சீரமைப்பதோடு, மழைநீர் வடிகால்வாயில் உள்ள கழிவுநீரையும் அப்புறப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
