ADDED : ஆக 20, 2026 03:11 PM
ஆதம்பாக்கம்: இடியாப்பக்கடை உரிமையாளரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி, 5,000 ரூபாய் பறித்த போதை ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை, ஆதம்பாக்கம் ஜீவன் நகர் 5வது தெரு சேர்ந்தவர் அழகர்சாமி, 33. இவர் ஆதம்பாக்கம் கருணிகர் தெருவில் இடியாப்ப கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, மதுபோதையில் இருவர் பைக்கில் அழகர்சாமி கடைக்கு வந்தனர்.
இருவரும், அழகர் சாமியிடம், தங்களுக்கு, 500 ரூபாய் மாமூல் கொடுக்க வேண்டும் என, கேட்டனர். அழகர்சாமி தரமறுத்தார். இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் கடையில் இருந்த பணப்பெட்டியை திறந்து பணத்தை எடுக்க முயன்றனர். அழகர்சாமி தடுக்க முயன்றபோது, அவரை இரும்பு கம்பியால் தாக்கினர்.
பின், பெட்டியில் இருந்த, 5,000 ரூபாயை எடுத்து சென்றனர். காடைமடைந்த அழகர்சாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தலையில் ஆறு தையல் போட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது குறித்த புகாரின் படி, ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
***
