/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெசன்ட் நகரில் கடைகள் தொடர்ந்து அதிகரிப்பு அரசியல் உறுதுணையால் அரங்கேறுது அத்துமீறல் மாநகராட்சி கைவிரிப்பதால் நீதிமன்றம் முன்வர எதிர்பார்ப்பு கடற்கரை அலங்கோலம்!
/
பெசன்ட் நகரில் கடைகள் தொடர்ந்து அதிகரிப்பு அரசியல் உறுதுணையால் அரங்கேறுது அத்துமீறல் மாநகராட்சி கைவிரிப்பதால் நீதிமன்றம் முன்வர எதிர்பார்ப்பு கடற்கரை அலங்கோலம்!
பெசன்ட் நகரில் கடைகள் தொடர்ந்து அதிகரிப்பு அரசியல் உறுதுணையால் அரங்கேறுது அத்துமீறல் மாநகராட்சி கைவிரிப்பதால் நீதிமன்றம் முன்வர எதிர்பார்ப்பு கடற்கரை அலங்கோலம்!
பெசன்ட் நகரில் கடைகள் தொடர்ந்து அதிகரிப்பு அரசியல் உறுதுணையால் அரங்கேறுது அத்துமீறல் மாநகராட்சி கைவிரிப்பதால் நீதிமன்றம் முன்வர எதிர்பார்ப்பு கடற்கரை அலங்கோலம்!
ADDED : ஜன 26, 2026 05:39 AM

சென்னை: பெசன்ட் நகர் கடற்கரையில் புற்றீசல் போல், 1,100க்கும் அதிகமான கடைகள் உள்ளதால், கடற்கரை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், சுற்றுலா பயணியர் வந்து செல்வதில் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கின்றனர். அரசியல்வாதிகள் தலையீட்டால், கடைகளை வரன்முறைப்படுத்த முடியாமல் மாநகராட்சி திணறுவதால், உயர் நீதிமன்றம் தலையிட்டு, மெரினா கடற்கரை போல் மேம்படுத்த உத்தரவிட வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சென்னையில், மெரினா கடற்கரைக்கு அடுத்து, அதிக மக்கள் கூடும் கடற்கரையாக பெசன்ட் நகர் உள்ளது. காலை, மாலையில் நடைபயிற்சி, விளையாட்டு பயிற்சி என, தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.
கடற்கரையை ரசிக்க வருவோர் வசதிக்காக, 2013ல், 245 கடைகள் வைக்க அனுமதிக்கப்பட்டது. நாளடைவில், இதன் எண்ணிக்கை அதிகரித்து, பல மடங்கு கூடிவிட்டது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன், சாலையில் இருந்து பார்த்தால், மணல் பரப்பு, கடல் தெரியும். தற்போது, கண்ணுக்கு எட்டும் துாரம் வரை கடைகளாக படர்ந்துள்ளன. இதனால், கடலை ரசித்து பொழுதுபோக்க செல்வோருக்கு சிரமம் ஏற்படுகிறது.
உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கடைகளால், பயணியர் நடந்து செல்ல சிரமம் உள்ளது. மேலும், கடற்கரை சுற்றுச்சூழலுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
அதனால், இங்குள்ள கடைகளை வரைமுறைப்படுத்த வேண்டும் என, பல்வேறு சமூக அமைப்புகள் வலியுறுத்தியும், உள்ளூர் அரசியல்வாதிகள் தலையீட்டால், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறுகின்றனர்.
உயர் நீதிமன்றம் தலையிட்டு, மெரினா கடற்கரையை மேம்படுத்த உத்தரவிட்டது போல், பெசன்ட் நகர் கடற்கரையின் ரம்மியமான சூழலை கொண்டுவர, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
புற்றீசல் சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
ஆரம்பத்தில், பெசன்ட் நகர் கடற்கரையை ஒட்டி ஆல்காட்குப்பம், ஊரூர் குப்பம், ஓடைக்குப்பம் பகுதிகளைச் சேர்ந்த மக்கள், கடைகளை நடத்தி வந்தனர். மொத்தம், 245 கடைகள் இருந்தன.
அவர்களுக்கு அளித்த அனுமதியில், கடற்கரையில் 6 அடி வீதம் கடைகள் ஒதுக்கப்படும். சாலையில் இருந்து கடற்கரைக்கு செல்ல, மணல் பரப்பில், 40 அடி வீதம் இடைவெளி விட்டு, இருபுறமும் கடைகள் நடத்த வேண்டும்.
ஒதுக்கப்பட்ட நபர்கள் தான் கடையை நடத்த வேண்டும். மறு வாடகைக்கு விட்டால் கடை காலி செய்யப்படும். கடற்கரையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்நிலையில், சில அரசியல்வாதிகள், தினமும் மூன்று கடைகள் வீதம் பங்குபோட்டு, வெளி நபர்களுக்கு வாடகைக்கு கொடுத்தனர்.
இதனால், மூன்று குப்பங்களைச் சேர்ந்தோரும், கடைகளை பிடித்து தங்களுக்கு வேண்டியவர்கள், உறவினர்கள், பீஹார், உ.பி., மாநிலத்தைச் சேர்ந்தோருக்கு, அதிக விலைக்கு வாடகைக்கு விட்டு வருமானம் பார்த்து வருகின்றனர். இதனால், புற்றீசல் போல், 1,100க்கும் மேற்பட்ட கடைகளாக அதிகரித்துள்ளன.
மாநகராட்சி அனுமதி இல்லாமல், நடைபயிற்சி பாதை, சாலையோரம், மணல் பரப்பில் பல கடைகளை, அடுத்தடுத்து சிலர் அமைத்து வருகின்றனர்.
கடிவாளம் தேவை அதேபோல், கடற்கரை அருகில் உள்ள தெருக்களில், பட்டா இடங்களில் கடை கட்டியவர்கள், நடைபாதை, சாலையை ஆக்கிரமித்து கடைகளை விரிவாக்கம் செய்துள்ளதால், பாதசாரிகள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். அதிகரித்து வரும் கடைகளுக்கு, அரசு கடிவாளம் போட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
மெரினா கடற்கரையில் கடை நடத்துவோர் பயனடைய வாங்கிய 'ஸ்மார்ட்' கடைகளை, பெசன்ட் நகர் கடற்கரையில் அமைக்க முடிவு செய்தோம். மக்கள் பிரதிநிதிகள், அரசியல்வாதிகளின் தலையீட்டால், அதை முறையாக அமைக்க முடியவில்லை; உரிய நடவடிக்கை எடுக்கவும் முடியவில்லை.
கடற்கரையின் அழகை பாதுகாக்கவும், பொதுமக்கள் முழு கடற்கரையை சுதந்திரமாக அனுபவிக்கவும், அனுமதி அளித்த கடைகளையும் குறைக்க வேண்டி உள்ளது.
அரசு அல்லது நீதிமன்றம் தலையிடாவிட்டால், அடுத்த இரு ஆண்டுகளில், கடற்கரையின் பெரும் பரப்பு கடைகளாகி மாறி, மோசமான சூழல் ஏற்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மூச்சுத்திணறல்
ஈரக்காற்று, கடல் அலை, மணலை ரசிக்க கடலுக்கு செல்கிறோம். குழந்தைகளுக்கு இயற்கையை ரசிக்க வைத்து பழக, பலர் வருகின்றனர். திரும்பிய பக்கமெல்லாம் கடைகளாக இருப்பதால், கடலை முழுமையாக ரசிக்க முடியவில்லை. மசாலா சார்ந்த உணவுகள் அதிகளவு சமைப்பதால், அதன் நெடி, மூச்சுத்திணற வைக்கிறது. பல கடைகள் சுகாதாரமாக இல்லை. கடைகளை வரன்முறைப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். - கீதா, 35, சுற்றுலா பயணி, கோட்டூர்புரம்.
அரசியல்வாதிகள் தலையீடு
பெசன்ட் நகர் கடற்கரையில், தினமும் 2 முதல் 5 கடைகள் வீதம் அதிகரித்து வருகின்றன. இங்குள்ள 75 சதவீத கடைகளை, வெளி நபர்களுக்கு கொடுத்து, உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் சில குடும்பங்களைச் சேர்ந்தோர், மொத்தமாக வசூலித்து வருகின்றனர். மீனவர்கள் நலன் கருதி, ஆல்காட்குப்பம், ஊரூர் குப்பம், ஓடைக்குப்பம் பெயரில் ஒரு கூட்டுறவு சங்கம் அமைத்து, குறிப்பிட்ட இடைவெளியில், தலா 1,000 சதுர அடி வீதம், மூன்று இடங்களை ஒதுக்கி கொடுத்து, அதில் அந்தந்த ஊர்களைச் சேர்ந்தோரை கடைகள் நடத்த அனுமதிக்க வேண்டும். ராட்டினம் பார்க் ஒப்பந்தத்தை ரத்து செய்ய மனு அளித்தும், அதையும் மீறி மாநகராட்சி புதுப்பித்து கொடுத்ததால், அதன் பின் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. மெரினாவை போல் இங்கும், நீதிமன்றம் தலையிட்டு கடைகளை ஒழுங்குபடுத்த வேண்டும். - டி.டி.பாபு, சமூக ஆர்வலர், சாஸ்திரி நகர்.

