ADDED : டிச 17, 2024 12:08 AM

மேல் காலத்தில் அசத்திய ஸ்ரேயா
மயிலாப்பூர் பிரம்ம கான சபாவில், வயலின் கலைஞர் ஸ்ரேயா தேவ்நாத், இசை கச்சேரியை நிகழ்த்தினார்.
இவருடன் சேர்ந்து, மயிலை கார்த்திகேயனின் நாதஸ்வரம், சிலம்பரசனின் தவில், பிரவீன் ஸ்பர்ஷ்ஷின் மிருதங்கம் ஆகிய வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. இந்த இசை குழுவினரின் நிகழ்ச்சியை காண, ஆவலோடு காத்திருந்த ரசிகர்களுக்கு இசை அமுதம் தயாரானது.
மயிலை கார்த்திகேயன், கம்பீர நாட்டை ராகத்தில், கண்டஜாதி திரிபுடை தாளத்தில் அமைந்த மல்லாரியில் துவங்கினார். தாள வாத்தியங்கள் துவங்கிய விதம் அருமை.
கீழ் காலம், திஸ்ர நடை, மேல் காலங்களில் வாசித்தது மற்றும் வயலின், நாதஸ்வரம் என, மாற்றி மாற்றி இசைத்தது, கேட்போருக்கு புத்துணர்ச்சியை அளித்தது.
அடுத்து, பரசு ராகம், த்ருபுட தாளத்தில், சியாமா சாஸ்திரி இயற்றிய 'நீலயதாக்க்ஷி' எனும் கீர்த்தனையை, அவரவர் வாத்தியங்களில் இசைத்தனர்.
சண்முகப்பிரியா ராகத்தை, இருவரும் விசேஷ பிரயோகங்களால் இசைத்ததில், மனம் மகிழ்ந்தது.
பின், ஆதி தாளத்தில் அமைந்த 'மரிவேற திக்கெவரையா' கீர்த்தனையை இசைத்தனர். இதில், கற்பனை ஸ்வரம் இசைத்த பகுதி, பிரமாதமாக அமைந்தது.
அடுத்தபடியாக, ஹெச்.என்.முத்தையா பாகவதர் இயற்றிய 'சரவணபவ சமயமிதிரா' எனும் பசுபதிப்ரியா ராகம், ஆதி தாளத்தில் அமைந்த கீர்த்தனையை வழங்கினர்.
தொடர்ந்து, சங்கராபரணம் ராகத்தை இசைக்கத் துவங்கினார், வயலின் விதுாஷி. தொடர்ந்து, நாதஸ்வர வித்வானும் இசைத்தார்.
இதில், 'சரோஜ தள நேத்ரி' எனும் சியாமா சாஸ்திரி இயற்றிய, ஆதி தாளத்தில் அமைந்த கீர்த்தனையை இசைத்தபோது, அனைவருக்கும் புல்லரித்தது.
இங்கு 'சாம கான வினோதினி குணதாம ஸ்யாமகிரிஷ்ணனுதே' என்ற வரிகளை, இருவரும் பல்வேறு பிரயோகங்களால் நிரவல் செய்தனர். மேல் காலத்திலும் இசைத்து அசத்தினர்.
-சரண்குமார்