ADDED : பிப் 03, 2026 06:11 AM

சென்னை: ''திட்டமிடப்படாத நகர மயமாக்கல், குப்பை கழிவுகள், கழிவுநீர் ஆகியவற்றால் சதுப்பு நிலங்கள் சுருங்குவதுடன், வெள்ள அபாயத்திற்கும் காரணமாக உள்ளது,'' என, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ஸ்ரீனிவாஸ் ஆர்.ரெட்டி கூறினார்.
உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு, வனத்துறையின் சதுப்பு நிலங்கள் இயக்கம் சார்பில், அடையாறு முகத்துவாரத்தில், நேற்று துாய்மை பணி நடந்தது.
இப்பணியை துவக்கி வைத்த முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ஸ்ரீனிவாஸ் ஆர்.ரெட்டி பேசியதாவது:
சதுப்பு நிலங்களின் சூழலியல் முக்கியத்துவமும், அதை பாதுகாப்பதற்கான அவசியமும் அதிகரித்துள்ளது. கனமழையின்போது, வெள்ளத்தை உறிஞ்சி, மெதுவாக வெளியேற்றுவதில் சதுப்பு நிலங்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
ஊர்வன, புலம்பெயரும் பறவைகள் போன்ற உயிரினங்களுக்கு முக்கிய வழித்தடமாகவும் உள்ளன.
திட்டமிடப்படாத நகரமயமாக்கல், குப்பை கழிவுகள் மற்றும் கழிவுநீரால் ஈர நிலங்கள் சுருங்குவதுடன், வெள்ள அபாயத்திற்கும் காரணமாக இருக்கின்றன.
தமிழகத்தின் 20 இடங்களில் சதுப்பு நிலங்கள் ராம்சார் தளங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில், தமிழகத்தில் சதுப்பு நிலங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளது.
சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு. இதுகுறித்து, மாணவ - மாணவியரிடம் விழிப்புணர்வை அதிகரிக்க, தன்னார்வ அமைப்புகள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத் தொடர்ந்து, இயற்கை நடை பயண நிகழ்வு நடந்தது. முகத்துவாரத்தில் இருந்து, 86 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டன.
நிகழ்வில், வனப் பாதுகாவலர்கள், கல்லுாரி மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.
