/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குட்டி கிருஷ்ணனின் லீலைகளை நாட்டியத்தில் வெளிக்காட்டிய ஸ்ருதி
/
குட்டி கிருஷ்ணனின் லீலைகளை நாட்டியத்தில் வெளிக்காட்டிய ஸ்ருதி
குட்டி கிருஷ்ணனின் லீலைகளை நாட்டியத்தில் வெளிக்காட்டிய ஸ்ருதி
குட்டி கிருஷ்ணனின் லீலைகளை நாட்டியத்தில் வெளிக்காட்டிய ஸ்ருதி
ADDED : டிச 21, 2024 12:12 AM

'நாதனை அழைத்து வா சகியே' என, தலைவியாய் சபா மேடையில் நுழைந்தார் நடன கலைஞர் சுருதி. காம்போஜி ராகத்தில், திருவீழிமிழலை கல்யாணம் சுந்தரம் பிள்ளையின் பதவர்ணம், மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப் அரங்கை ஈர்க்க ஆரம்பித்தது.
சாய்வுகளை அழகாய் உடைய அடவுகளோடு, தன்மெல்லிய சிரிப்பை சிதறி சதுச்ரம், திச்ரம் என கதிபேதம் செய்தும், இடம் தள்ளி அமைந்த கோர்வைகளை நிதானமாகவும், தெளிவாகவும் தன் ஜதிகளின் ஆடல் அமைப்பில் வெளிப்படுத்தினார்.
'போரில் வென்று, தேரில் பவனி வரும் முருகனிடம் சொல்லாயோ சகியே, என் காதலை அறிந்த அவர் ஒரு நொடியேனும் என்னை பிரிவாரோ கூறாயோ சகியே' என, தன் அன்புக்குரியவர் மீதான தவிப்பை, முதல் இரண்டு சஞ்சாரியில் வெளிப்படுத்தினார்.
மேலும், அவரின் மனம் கல்லா... எனக்காக உருகாதா... என கேட்க, முத்தாயிஸ்வரமும் ஸர்ப்ப நடையும் அமைய, தன் தோழியான முருகனின் வாகனமான மயிலியிடம் வேண்டி கேட்கிறாள் தலைவி.
இதையடுத்து, பிரணவத்தின் பொருள் சொல்லாத பிரம்மனை சிறையிட்டு, தன் தந்தைக்கே உபதேசம் செய்தவன் என சரணம் அமையப்பெற்றது.
அழகுடையவன், அருள் உடையவன், குணம் உடையவன்என, சரண சாஹித்யங்கள் அமைய, அதற்கு மயிலாக மாறி ஆட்டத்தில் அசத்தினார் ஸ்ருதி.
தொடர்ந்து, சூர்தாஸின் தேஸ் ராக பஜன் ஆரம்பித்தது. வெண்ணை திருடும் கிருஷ்ணன் பிடிபடுகிறார்.
அதற்கு, 'நானே மாடு மேய்க்கிறவன். நண்பர்களுடன் விளையாடும்போது சண்டையில் என் மேல் வெண்ணை பூசிவிட்டனர்.என் குட்டி கை எப்படி பானைக்குள் எட்டும்' என, கிருஷ்ணன் பொய் கோபம் செய்வதுபோல், சின்ன குழந்தையாக முக பாவனைகளை மாற்றி சுருதி நிகழ்த்தியது, ரசிகர்களை பரவசமடைய வைத்தது.
நிறைவாக, தாமரை மலர் மாலை சூடி அலர்மேல் மங்கையாய், அண்ணமாச்சாரியாரின்சங்கராபரணக்கிருதியில் தோன்றினார். பாடல் வரிகளுக்கு ஏற்ப மலர் மாலை சிதறியதும், கூந்தல் ஆடியதும் ரசிக்க முடிந்தது.
பிரபல நாட்டிய கலைஞர் ஊர்மிளா சத்யநாராயணனின் மாணவியான ஸ்ருதிக்கு காயத்ரி சசீதரன் நட்டுவாங்கம், வினுவேணுகோபால் குரலிசை, பரத்வாஜ் மிருதங்கம், கலையரசன் வயலின், இசை சேர்ந்து, அற்புதத்தை நிகழ்த்தியிருந்தது.
- மா.அன்புக்கரசி