ADDED : நவ 23, 2024 12:39 AM
சென்னை, சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், நேற்று அதிகாலை 2:50 மணிக்கு புறப்பட வேண்டும். இதில், பயணம் செய்ய பயணியர் நேற்றுமுன்தினம் இரவு 11:00 மணி முதல் வர துவங்கினர். ஆனால், ஏதோ தொழில்நுட்ப குளறுபடி காரணமாக, விமானம் தாமதமாக புறப்படும் என, தகவல்கள் அனுப்பப்பட்டன. இருப்பினும், சிலருக்கு தகவல் சரியாக கிடைக்காததால், விமான நிலையம் வந்து பலரும் காத்திருந்தனர்.
பல மாதங்களுக்கு முன், டிக்கெட் முன்பதிவு செய்த பயணியர், குறித்த நேரத்தில் பயணம் செய்ய முடியாமலும், மாற்று விமானத்தில் செல்ல முடியாமலும் சிரமப்பட்டனர். பின், 11 மணி நேரம் தாமதமாக மதியம், 1:55 மணிக்கு விமானம் புறப்பட்டு சென்றது.
குறிப்பிட்ட சில விமான நிறுவனங்கள் ரத்து செய்வதும், தாமதம் அறிவிப்பதும் தொடர்கதையாகி வருவதால், பயணியர் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுபோன்ற குளறுபடிகள் நடக்காமல், மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
