ADDED : நவ 13, 2026 07:31 PM

சென்னை: சமூக சேவகரும், மைத்ரி அறக்கட்டளையின் முக்கிய பொறுப்பாளருமான ஸ்ரீதர், 80, வயது மூப்பால் இன்று (நவ.,13) காலமானார்.
சமூக சேவையில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர் ஸ்ரீதர். சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதையே வாழ்நாள் லட்சியமாகக் கொண்டிருந்தார். ஏழை மாணவர்களின் கல்விக்காக, பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி, நுாற்றுக்கணக்கானோரின் எதிர்காலத்துக்கு உதவினார்.
மைத்ரி அறக்கட்டளை வாயிலாக மருத்துவ முகாம்கள், முதியோர் இல்லப் பராமரிப்பு, அன்னதானம், பேரிடர் கால நிவாரணப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளைச் செய்து வந்தார். தன் எளிமையான அணுகுமுறையால், இளைஞர்களையும் சமூக சேவையில் ஈடுபட ஊக்குவித்தார். இவரது சேவையைப் பாராட்டி, பல்வேறு அமைப்புகள் விருதுகள் வழங்கியுள்ளன.
பொதுமக்கள் அஞ்சலிக்காக, வில்லிவாக்கம் நாதமுனி தெருவில் உள்ள சானா ரெட்டி அடுக்குமாடி குடியிருப்பில் அவரது உடல் வைக்கப்பட்டது. இறுதிச் சடங்குகள் இன்று மாலை கண்ணம்மாபேட்டையில் நடைபெற்றன.
