/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சடையங்குப்பம் மேம்பாலத்தில் சோலார் மின்விளக்குகள்
/
சடையங்குப்பம் மேம்பாலத்தில் சோலார் மின்விளக்குகள்
ADDED : நவ 17, 2024 10:16 PM
மணலி:சடையங்குப்பம் மேம்பாலத்தில், சோதனை முயற்சியாக சோலார் மின்விளக்குகள் பொருத்தும் பணி நடக்கிறது.
மணலி மண்டலம், 16 வது வார்டில், சடையங்குப்பம் கிராமம் உள்ளது. இந்த ஊரை சுற்றிலும், கொசஸ்தலை ஆறு உபரி கால்வாய், புழல் உபரி கால்வாய், பகிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகள் உள்ளன.
வெள்ளக்காலங்களில், திறந்து விடப்படும் உபரி நீரால் இந்த கிராமம் கடுமையாக பாதிக்கப்படுவது நீடித்தது. நான்கு புறமும் வெள்ளநீர் சூழ்ந்து தீவாக மாறுவது வழக்கம்.
இதற்கு தீர்வாக, 2010ல், 16 கோடி ரூபாய் செலவில், சடையங்குப்பம் கிராமத்தில் இருந்து புழல் உபரி கால்வாய், பகிங்ஹாம் கால்வாயை கடக்கும் வகையில், பிரமாண்ட மேம்பாலம் கட்டும் பணி துவங்கியது.
நில ஆர்ஜிதம் காரணமாக பாதிக்கப்பட்டோர், நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கால், மேம்பால பணி நீண்ட காலம் தடைப்பட்டது. பின், ஜவ்வாக இழுத்து, 95 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன.
ஆனால், மேம்பாலம் இன்னும் மக்கள் பயன்பாட்டிற்கு முறையாக திறக்கப்படவில்லை. தெருவிளக்கு மற்றும் பிளம்பிங் வேலைகள் எஞ்சியுள்ளன.
ஆனால், மேம்பாலத்தை மக்களே பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். மேம்பாலத்தில் விளக்குகள் இல்லாததால், இரவு நேரங்களில் வழிப்பறி அச்சம் நிலவியது. எனவே, தற்காலிகமாக தெருவிளக்குகள் அமைத்து கொடுக்க அப்பகுதி மக்கள் கோரி வந்தனர்.
அதன்படி, மாநகராட்சி எலக்டிரிக்கல் பிரிவு அதிகாரிகள், நேற்று மதியம் சோலார் தெருவிளக்குகள் அமைக்கும் பணியை துவக்கினர். அதன்படி, மேம்பாலத்தில் ஒரு பக்கம் மட்டும், 80 அடி இடைவெளியில், தலா ஒரு சோலார் தெருவிளக்கு என, ஏழு இடங்களில் சோதனை முயற்சியாக அமைக்கப்பட்டு வருகின்றன. பின், படிப்படியாக அனைத்து தெருவிளக்குகளும் அமைக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.