sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 30 ஆண்டுகள் வெள்ள பாதிப்பு பிரச்னைக்கு தீர்வு ரூ.20 கோடியில் கால்வாய் கட்டும் பணி துவக்கம்

/

 30 ஆண்டுகள் வெள்ள பாதிப்பு பிரச்னைக்கு தீர்வு ரூ.20 கோடியில் கால்வாய் கட்டும் பணி துவக்கம்

 30 ஆண்டுகள் வெள்ள பாதிப்பு பிரச்னைக்கு தீர்வு ரூ.20 கோடியில் கால்வாய் கட்டும் பணி துவக்கம்

 30 ஆண்டுகள் வெள்ள பாதிப்பு பிரச்னைக்கு தீர்வு ரூ.20 கோடியில் கால்வாய் கட்டும் பணி துவக்கம்


ADDED : ஜன 06, 2026 06:08 AM

Google News

ADDED : ஜன 06, 2026 06:08 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி: ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில், 30 ஆண்டுகளாக நீடித்த வெள்ளப்பாதிப்பு பிரச்னைக்கு தீர்வு காண, 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கால்வாய் அமைக்கும் பணி துவங்கியது.

ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, கடந்த 1993ல் உருவாக்கப்பட்டது. இங்கு, 40, 41வது வார்டுகளில் உள்ள ஆறு பிளாக்குகளில், 5,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

ஆவடி எச்.வி.எப்., - ஓ.சி.எப்., - சி.வி.ஆர்.டி.இ., ஆவடி பேருந்து நிலையம், பக்தவச்சலபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வெளியேறும் மழை நீர், பருத்திப்பட்டு ஏரியில் கலக்கும் வகையில், 1988ல் பொதுப்பணித்துறையால் 190 மீட்டர் துாரத்துக்கு 30 அடி மழைநீர் வடிகால்வாய் கட்டப்பட்டது.

அதே ஆண்டில், இந்த கால்வாயை, அரசாணை 195ன் படி, வீட்டு வசதி வாரியத்திடம், பொதுப்பணித்துறை ஒப்படைத்தது. 2004ல், வீட்டு வசதி வாரியம், 5 அடி கால்வாயை விரிவாக்கம் செய்யாமல், ஆவடி நகராட்சியிடம் ஒப்படைத்தது.

இந்த கால்வாய், சி.டி.எச்., சாலையை கடந்து, 5 அடியாக சுருங்கி உள்ளது. இதனால், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக, ஒவ்வொரு மழை காலத்திலும், மேற்கூறிய பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், கழிவு நீர் ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தேங்கி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

தவிர, 2.5 கி.மீ., துாரமுள்ள கால்வாயில், சுற்றுவட்டார பகுதி மக்கள் குப்பை கொட்டி, குப்பை கிடங்காவும் பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த 2005 பருவமழையின் போது, திருவள்ளூர் மாவட்ட வருவாய் கோட்ட அலுவலர் ஆய்வு மேற்கொண்டு, சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால்வாயை அகலப்படுத்த வேண்டும் என அறிக்கை சமர்ப்பித்தார். பின், 2007, 2015ம் ஆண்டுகளில் பெய்த கனமழையால், குடியிருப்பில் வெள்ளம் புகுந்து, பொதுமக்கள் ஒரு மாதம் அவதி அடைந்தனர். இருப்பினும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

திறந்தவெளி கால்வாய் அருகில் தனியார் பள்ளிக்கூடம், குடியிருப்பு இருப்பதால் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, 2015ல், நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.

அதன்பின்னும் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், 2015 ஆகஸ்ட் 5ம் தேதி இரவு, கால்வாயை ஒட்டியுள்ள பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன் என்பவரின் ஒன்றரை வயது பெண் குழந்தை, கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்தது.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும், வெள்ளப்பாதிப்பு பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

கடந்த 2024, நவ., 11ம் தேதி, வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய, அமைச்சர் நேரு வந்தபோது, பிரச்னைக்கு தீர்வு காண உத்தரவிட்டார்.

இதையடுத்து, மாநில பேரிடர் மேலாண்மை நிதியின் கீழ், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 60 அடி சாலையில், 'கட் அண்டு கால்வாய்' அமைக்க, நவ., மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.

அதன்படி, திருமலைராஜபுரம், சி.டி.எச்., சாலையை கடந்து, ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, 60 அடி சாலை வழியாக, பருத்திப்பட்டு ஏரி மற்றும் கூவம் ஆற்றை இணைக்கும் வகையில், 1,400 மீட்டர் துாரத்துக்கு, 20 அடி அகலம் உடைய கால்வாய் அமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது.

கால்வாய் அமைப்பதன் வாயிலாக, 80 சதவீத வெள்ளப்பாதிப்பு பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். அதேபோல், கன்னிகாபுரம் பகுதியில் உள்ள கால்வாயை பலப்படுத்தி, மூன்று அடிக்கு சுற்றுச்சுவரை உயர்த்த வேண்டும். இதன் வாயிலாக, கால்வாயை ஒட்டியுள்ள 35, 39, 40, 44வது வார்டுகளில் உள்ள 5,000 வீடுகளில் கழிவு நீர் புகாமல் தடுக்க முடியும். - ரவி, தி.மு.க., கவுன்சிலர், 40வது வார்டு.







      Dinamalar
      Follow us