ADDED : ஆக 21, 2025 01:12 AM

18 கிலோ கஞ்சா பறிமுதல்
பூந்தமல்லி: பூந்தமல்லி புறவழிச்சாலை, பீர் கம்பெனி அருகேயுள்ள காலி இடத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம், பூந்தமல்லி மதுவிலக்கு போலீசார் அப்பகுதியில் கண்காணித்தனர். அதில், கேரள மாநிலத்தை சேர்ந்த அபிஜித், 18, என்பவர்,3 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்டார். இதேபோல், பூந்தமல்லி வெளியூர் பேருந்து நிறுத்தத்தில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கேரள மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீஜித், 26, முகமது ஆசிக், 25, ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
எண்ணுார்: எண்ணுார், காமராஜர் நகரில், கஞ்சா விற்பனையில் தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்த சூர்யா, 28, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து, 1.5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ராயப்பேட்டை: வெஸ்ட்காட் சாலையில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சையது முகமது, 28, முகமது இஷாக், 33 ஆகிய இருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர்களது கையில் வைத்திருந்த பையை சோதனை செய்ததில், 1.80 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
ரயிலில் அடிப்பட்டு
வாலிபர் பலி
திருவொற்றியூர்: சென்னை, திருவொற்றியூர் அடுத்த விம்கோ நகர் ரயில் நிலையம் அருகே, நேற்று முன்தினம் இரவு, 35 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத வாலிபர், தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, கும்மிடிபூண்டி நோக்கிச் சென்ற, மின்சார ரயிலில் அடிப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இறந்தவர் குறித்து,கொருக்குபேட்டை ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
போக்குவரத்து ஊழியர்கள்
ஆர்ப்பாட்டம்
சென்னை: ஓய்வுகால பலன்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி சி.ஐ.டி.யு., சார்பில் மூன்றாவது நாளாக சென்னையில் நேற்று போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் தாம்பரம், வடபழனி உள்ளிட்ட ஏழு பணிமனைகளில் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர். சி.ஐ.டி.யு., பொதுசெயலர் ஆறுமுகநயினார், மாநகர போக்குவரத்து கழக பொதுசெயலர் தயானந்தம் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
போலி மருத்துவர் கைது
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த காரை கிராமத்தில், செயல்பட்ட தனியார் கிளினிக்கில் நேற்று காஞ்சிபுரம் சுகாதாரத்துறை இணை இயக்குநர் ஹிலாரினா நளினி ஜோஷிடா ஆய்வு நடத்தி னார். அப்போது, திருமலை , 42 என்பவர் பிளஸ் 2 மட்டுமே படித்துவிட்டு, காரை பகுதியில் மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, சுகாதாரத்துறை இணை இயக்குநர் புகா ரின் அடிப்படையில் திருமலை கைது செய்யப்பட்டார்.