ADDED : ஏப் 24, 2026 05:57 PM
சென்னை: கோடை காலத்தின் கடுமையான வெயில் மற்றும் அதனால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகளைச் சமாளிக்க சித்த மருத்துவர் அருண், பின்வரும் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
கோடை காலம் வந்து விட்டால் வெப்பம் காரணமாக நீர் கடுப்பு, சிறுநீர் அடைப்பு, சிறுநீரகத்தில் கல், மஞ்சள் காமாலை, அம்மை உள்ள பல நோய்கள் கோடை காலத்தில் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
கோடை வெயிலை சமாளிப்பது குறித்து, வேளச்சேரியைச் சேர்ந்த சித்த மருத்துவர் அருண் கூறியதாவது:
கோடைகாலம் வந்து விட்டால் வழக்கத்தைவிட, கூடுதலாக 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். சுரக்காய், பூசணிக்காய், முள்ளங்கி போன்ற நீர் காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். திரவ உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
நன்னாரி சர்பத், வெண்ணெய் எடுத்த தாளித்த நீர் மோர், இளநீர், சாத்துக்குடி, எலுமிச்சை, ஆரஞ்சு பழச்சாறுகள், உடல் உஷ்ணத்தை வெகுவாகத் தணிக்கும்; உடலைக் குளிர்ச்சியாக்கும்.
வியர்வை நாற்றத்தை போக்க தினமும் பூலாங்கிழங்கு, சந்தனம் தேய்த்துக் குளிக்கலாம். தோலின் நிறத்தைப் பாதுகாக்க தினமும் உலர் திராட்சையை சாப்பிடலாம்.
குளிக்கும் நீரில் வேப்பிலை சேர்த்து அரை மணிநேரம் கழித்து குளித்தால் உடம்பிற்கு குளிர்ச்சி கிடைக்கும். கிருமி நாசினியாகவும் திகழும். பாதம் பிசின் ஒரு டியூஸ்பூன் அரை டம்ளர் நீரில் ஊறவைத்து மறுநாள் காலை, வெறும் வயிற்றில் குடித்தால் உடல் குளுமை பெறும்.
கோடை காலத்தின்போது முகத்தில் வெண்புள்ளிகள் தோன்றுவது சகஜம். வெள்ளை கரிசலாங்கண்ணி இலையுடன், துளசி சேர்த்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். தினமும் உணவில் மிளகு, வல்லாரை, சுண்டைக்காய் சேர்த்துக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
