ADDED : மார் 13, 2026 04:35 AM
சென்னை: சென்னையில் இருந்து துபாய்க்கு, சிறப்பு விமானங்களை இயக்குவதாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
மேற்காசிய நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றத்தால், விமான சேவைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் விமான சேவைகளையும், விமான நிறுவனங்கள் நிறுத்தி உள்ளன. அதன்படி ஏர் இந்தியா நிறுவனம், மறுஅறிவிப்பு வரும் வரை மேற்காசிய நாடுகளுக்கு இடையேயான சேவைகளை நிறுத்தியுள்ளது.
இந்நிலையில், சென்னை, டில்லி, மும்பை , ஹைதராபாத் உள்ளிட்ட விமான நிலையங்களில் இருந்து துபாய், சார்ஜா, ரஸ் அல் கைமா உள்ளிட்ட இடங்களுக்கு, நாளை ஒரு நாள், சிறப்பு விமான சேவை வழங்க உள்ளதாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னையில் இருந்து துபாய்க்கு நாளை மாலை 3:00 மணிக்கும், துபாயில் இருந்து சென்னைக்கு இரவு 8:25 மணிக்கும் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
ஏற்கனவே டிக்கெட் புக்கிங் செய்து திரும்ப முடியாமல் உள்ள பயணியருக்கு மட்டுமே, சிறப்பு விமானங்கள் பொருந்தும் என, ஏர் இந்தியா வட்டாரங்கள் தெரிவித்தன.
