/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
3 இடமாக பிரிந்த சிறப்பு சந்தை திருஷ்டி பூசணி விற்பனை 'டல்'
/
3 இடமாக பிரிந்த சிறப்பு சந்தை திருஷ்டி பூசணி விற்பனை 'டல்'
3 இடமாக பிரிந்த சிறப்பு சந்தை திருஷ்டி பூசணி விற்பனை 'டல்'
3 இடமாக பிரிந்த சிறப்பு சந்தை திருஷ்டி பூசணி விற்பனை 'டல்'
ADDED : அக் 13, 2024 02:17 AM

கோயம்பேடு:கோயம்பேடு சிறப்பு சந்தை மூன்று இடங்களில் பிடித்து அமைக்கப்பட்டதால் வியாபாரம் குறைந்து, திருஷ்டி பூசணிக்காய் உள்ளிட்ட பொருட்கள் குப்பைக்குச் சென்றதாக, வியாபாரிகள் குற்றம்சாட்டினர்.
கோயம்பேடு சந்தையில் ஆயுத பூஜை, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில், அங்காடி நிர்வாக குழு சார்பில் சிறப்பு சந்தை நடத்துவது வழக்கம்.
இதில் கரும்பு, வாழைக்கன்று, மஞ்சள் கொத்து, இஞ்சிக் கொத்து, வாழை இலை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படும்.
கோயம்பேடு பூ சந்தை வளாகத்தில், சிறப்பு சந்தை அமைக்கப்படும். இங்கு பூஜை பொருட்கள், வாழைக்கன்று, அவல், பொரி, திருஷ்டி பூசணிக்காய் என, அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைக்கும்.
இந்த ஆண்டு சிறப்பு சந்தை, கடந்த 8ம் தேதி துவங்கியது.
இதில் பொரி, அவல், பொட்டுக் கடலை ஆகியவை உணவு தானிய அங்காடியிலும், தோரணம், மஞ்சள் கொத்து உள்ளிட்டவை கோயம்பேடு சந்தை ‛ஈ' சாலையிலும் விற்கப்பட்டன. மேலும் திருஷ்டி பூசணிக்காய், வாழைக்கன்று ஆகியவை கோயம்பேடு ‛ஏ' சாலையில் விற்கப்பட்டன.
இதனால், பொருட்கள் வாங்க நுகர்வோர் அலையும் நிலை ஏற்பட்டது.
இதனால் விற்பனை குறைந்து, ஆயுத பூஜைக்கு விற்பனைக்கு வந்த 1,500 டன் திருஷ்டி பூசணிக்காயில், 300 -- 400 டன் பூசணிக்காய் தேங்கி, குப்பையாகி உள்ளது.
சிறப்பு சந்தையை மூன்று இடங்களில் பிரித்து அமைத்ததே, இதற்கு காரணம் என, வியாபாரிகள் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து, சிறு மொத்த வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்.எஸ்.முத்துக்குமார் கூறியதாவது:
நுகர்வோர் எந்த சிரமம் இல்லாமல், அனைத்து பொருட்களையும் ஒரு இடத்தில் வங்கிச் செல்லவே, சிறப்பு சந்தை அமைக்கப்பட்டு வந்தது. இம்முறை மூன்று இடங்களில் பிரித்து அமைக்கப்பட்டது.
இதனால், வியாபாரம் மந்தமானது. அத்துடன், முறையாக கடை அமைத்த வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஆனால், அத்துமீறி குறிப்பிட்ட பொருட்கள் விற்பனை செய்ய வேண்டிய இடத்தில் பிற பொருட்களை விற்பனை செய்த நடைபாதை வியாபாரிகளுக்கு லாபம் கிடைத்தது.
இவ்வாறு அவர் கூறினார்.