தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அண்ணா பல்கலை மாணவர் பலியால் அதிர்ச்சி வேகமேடுக்குது 'டெங்கு':சென்னையில் 18 நாட்களில் 614 பேர் பாதிப்பு

அண்ணா பல்கலை மாணவர் பலியால் அதிர்ச்சி வேகமேடுக்குது 'டெங்கு':சென்னையில் 18 நாட்களில் 614 பேர் பாதிப்பு

அண்ணா பல்கலை மாணவர் பலியால் அதிர்ச்சி வேகமேடுக்குது 'டெங்கு':சென்னையில் 18 நாட்களில் 614 பேர் பாதிப்பு


UPDATED : செப் 19, 2026 11:29 PM

ADDED : செப் 19, 2026 08:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 19, 2026 11:29 PM ADDED : செப் 19, 2026 08:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை: சென்னை மாநகராட்சியில், 'டெங்கு' காய்ச்சல் பாதிப்பு வேகமெடுத்துள்ளது. கடந்த 18 நாட்களில், 614 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதங்களை ஒப்பிடுகையில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இம்மாதம் அதிகபட்சமாக பதிவாகி உள்ளது. இந்நிலையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலை மாணவர் உயிரிழந்தது, மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மழைக்காலங்களில் தேங்கும் துாய்மையான தண்ணீரில் உருவாகும், 'ஏடிஸ்' வகை கொசுக்கள் மூலமாக, 'டெங்கு' காய்ச்சல் பரவுகிறது. பருவநிலை மாற்றங்கள் காரணமாக, பருவமழைக்கு முன்னரே 'டெங்கு' காய்ச்சல், தற்போது வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில், சென்னை அண்ணா பல்கலை மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இறுதியாண்டு மாணவரான திருவண்ணாமலையைச் சேர்ந்த ஹரிஷ்குமார், 21, என்பவருக்கு, சில நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது.

விடுதியில் தங்கியிருந்த அவருக்கு, பாதிப்பு தீவிரமடைந்ததால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

மேலும், ஆனந்தராஜ் என்ற மாணவருக்கும், இதேபோன்ற பாதிப்பு ஏற்பட்டு, அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து நேற்று, அண்ணா பல்கலை வளாகத்தில், மாநகராட்சி கமிஷனர் தலைமையில் தீவிர சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மொத்தம் 100 ஊழியர்கள் கொசு மருந்து தெளித்தல், தேவையற்ற பொருட்களை அகற்றுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டனர்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

உயிரிழந்த மாணவர் ஹரிஷ்குமாருக்கு உண்ணிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தாவரங்களில் வளரும் ஒருவகை உண்ணிப் பூச்சி கடிப்பதால் இந்தக் காய்ச்சல் ஏற்படுகிறது. உண்ணிப் பூச்சிகளை ஒழிக்க, 'அக்குவா கேத்திரி' என்ற மருந்து கலந்து செடிகளில் தெளிக்கப்பட்டது.

வளாகம் முழுதும் தீவிர சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உடல்வலி, காய்ச்சல் பாதித்த மாணவர்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்நிலையில், அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும் அழகப்பா காலேஜ் ஆப் டெக்னாலஜியில் பயிலும் கோயம்புத்துாரைச் சேர்ந்த அபிநயா, 19, என்ற மாணவி, காய்ச்சல் காரணமாக தரமணி வி.ஹெச்.எஸ்., என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

*தினசரி 50 பேர் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், தினசரி 50க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையை பொறுத்தவரை, மாதத்திற்கு 200க்கு கீழ்தான் டெங்கு பாதிப்பு இருந்தது.

அதேநேரம், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு, 600க்கு மேல் அதிகரித்துள்ளது. செப்., மாதத்தில் இதுவரை, 614 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் பாதிப்பு, இந்தாண்டு இறுதி வரை நீடிக்கும் என, டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

*திருவள்ளூரில் 70 பேர்

திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு காய்ச்சல் காரணமாக தினமும் 80க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு வருகின்றனர். நேற்று ஒரே நாளில், 70 பேர் காய்ச்சல் பாதிப்பால் சிகிச்சைக்கு வந்தனர்.

அவர்களுக்கு ரத்த பரிசோதனை மேற்கொண்டதில், மூன்று பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்கள் தீவிர காய்ச்சல் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் டெங்கு சிகிச்சைக்காக 20 படுக்கைகளும், தீவிர காய்ச்சல் சிகிச்சை பிரிவில் 30 படுக்கைகளும் உள்ளன. மேலும், 24 மணி நேரமும் ரத்த பரிசோதனை செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாதங்கள் பாதிப்பு எண்ணிக்கை ஜனவரி 311 பிப்ரவரி 197 மார்ச் 169 ஏப்ரல் 131 மே 154 ஜூன் 137 ஜூலை 282 ஆகஸ்ட் 605 செப்டம்பர் (இதுவரை) - 614

கொசுப்புழு அழிப்பு பணி தீவிரம் சென்னை மாநகராட்சி கமிஷனர் சமீரன் கூறியதாவது: சென்னையில் இரண்டு மாதங்களாக, 'டெங்கு'வின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. காய்ச்சலை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறோம். சென்னை முழுதும் கொசுப்புழு வளரிடங்கள் கண்டறிந்து அழிக்கும் பணி நடந்து வருகிறது. அனைத்து பகுதிகளிலும், தொடர்ச்சியாக மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் அச்சப்படக்கூடிய வகையில், சென்னையில் 'டெங்கு' தீவிர தன்மையுடன் இல்லை. அண்ணா பல்கலை மாணவர், 'ஸ்கிரப் டைபஸ்' என்ற காய்ச்சலால் உயிரிழந்தார். அண்ணா பல்கலை, 200 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மரம், செடிகள் உள்ளன. அங்கு துாய்மை பணி தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us