ADDED : ஜன 07, 2026 05:38 AM

466 ரன்கள் குவித்து எபினேசர் பள்ளி சாதனை
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி, நேற்று முன்தினம் பட்டாபிராமில் துவங்கியது. கொரட்டூர் எபினேசர் பள்ளி அணி, 30 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு, 466 ரன்களை குவித்தது. அடுத்து விளையாடிய செயின்ட் ஜான்ஸ் பள்ளி, 11.5 ஓவர்களில், அனைத்து விக்கெட்களையும் இழந்து, 15 ரன்களில் சுருண்டது. இதனால், 451 ரன்கள் வித்தியாசத்தில், எபினேசர் பள்ளி வெற்றி பெற்றது.
'டி - 20' அரையிறுதியில் ராணிப்பேட்டை அணி
சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் ஆடவருக்கான மாநில எஸ்.எஸ்.ராஜன் 'டி - 20' கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில், தஞ்சாவூர் அணியை காலிறுதியில் வீழ்த்தி, முதல் அணியாக செங்கல்பட்டு அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது. நேற்று நடந்த ராணிப்பேட்டை மற்றும் மதுரை அணிகளுக்கு இடையேயான காலிறுதி போட்டியில், முதலில் பேட் செய்த மதுரை அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய ராணிப்பேட்டை அணி 19.4 ஓவர்களில் 187 ரன்கள் அடித்து, அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
'டி - 20' காலிறுதியில் அரசு பள்ளி அசத்தல்
சென்னை: விநாயக மிஷன் நிகர்நிலை பல்கலை சார்பில், வேந்தர் கணேசன் கோப்பைக்கான 'டி20' கிரிக்கெட் போட்டிகள், செங்கல்பட்டில் நடக்கின்றன. நேற்று நடந்த காலிறுதியில், ஜேப்பியார் மற்றும் செயின்ட் பீட்ஸ் அணிகளுக்கான போட்டியில் ஜேப்பியார் அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது. செயின்ட் பீட்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் மட்டுமே எடுத்து, 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
* மற்றொரு காலிறுதியில், நெல்லை நாடார் பள்ளி அணி முதலில் பேட் செய்து, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய புதுார் அரசு பள்ளி அணி, 19.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் சேர்த்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற இரு அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

