ADDED : பிப் 09, 2026 06:14 AM

ஆவடி: ஆவடி, ஸ்ரீராம் நகரில் புதிதாக போடப்பட்ட சாலை, ஒன்றரை மாதத்திலேயே குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலைக்கு மாறியதால், தரம் குறித்து கேள்வி எழுந்துள்ளது.
ஆவடி அடுத்த பருத்திப்பட்டு, ஸ்ரீராம் நகரில் 3,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு ஸ்ரீராம் நகர் பூங்காவை ஒட்டி அமைந்துள்ள சாலை, பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருந்தது.
மழைக்காலத்தில் வெள்ளம் தேங்கி நின்றதால், பொதுமக்கள் அவதி அடைந்தனர். இதுதொடர்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும் சாலை அமைக்கப்படவில்லை. இந்நிலையில், ஒரு மாதத்திற்கு முன், இந்த சாலையில் 'வெட் மிக்ஸ்' கொட்டி, தார்ச் சாலை அமைக்கப்பட்டது.
ஆனால், சாலை அமைத்த ஒன்றரை மாதத்திலேயே, பல இடங்களில் குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
ஆவடி மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சிய போக்கால், மக்கள் வரிப்பணம் தொடர்ந்து வீணடிக்கப்படுகிறது. எனவே, ஆவடி மாநகராட்சி கமிஷனர் சரண்யா, மேற்படி சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
