/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அபிநயங்களில் கொஞ்சிய ஸ்ரீவித்யா
/
அபிநயங்களில் கொஞ்சிய ஸ்ரீவித்யா
ADDED : ஜன 02, 2026 05:49 AM

வ ண்டு போல் கண்கள் பரபரப்புடன் அசைய, அன்னை காமாட்சியாய் வடிவெடுத்து, அவளின் திருவடிகளை வணங்கி சமர்ப்பணம் செய்வதாய் அமைந்தது, ஸ்ரீவித்யா சைலேஷின் நாட்டியம். ஷ்யாமா சாஸ்திரியின் பைரவி ராக, 'காஞ்சி காமாட்சி' பாடலோடு துவங்கியது.
பின், சக்ரவாகம் ராகத்தில், பந்தனை நல்லுார் ஸ்ரீனிவாசன் இயற்றிய 'என்னேரமும் அவரை நினைந்தேன்' என்ற வரிகளோடு பக்தி சிருங்கார நாயகியாக, தஞ்சாவூரின் பிரகதீஸ்வரரை வரவழைத்தார்.
இந்த வர்ணத்தில், எந்த வேலை செய்தாலும், நாயகனின் நினைப்பாகவும், அவர் அழைப்பது போலவுமே நினைக்கிறாள் நாயகி. இதில் யானை மேல் அரசன் பவனி வரும் அழகும், தஞ்சாவூர் தேரில் ஈசன் வீற்றிருக்கும் காட்சியும், ஸ்ரீவித்யா சஞ்சாரியாக செய்தது, கண்முன்னே கண்டதுபோல் அற்புதமாய் இருந்தது.தென்றலின் தீண்டலும், மன்மதனின் பாணமும் நாயகியின் மனதை வதைக்கிறது.
காதலன் தன்னுடன் இல்லையே என ஏங்குகிறாள். 'இதற்கு எதாவது வழி சொல்லேன்' என்கிறா ள் தோழியிடம். இந்த காட்சியை, சரண சாஹித்யம் வழியே புரியவைத்தார்.
தொடர்ந்து, கவுலிபந்து ராகத்தில் கதவை திறக்க, பதம் துவங்கியது. கிருஷ்ணர் செய்யும் லீலைகளை, நாயகியிடம் கூறிய தோழி, 'அவனா இனி மேல் இங்கு வருவான். அவனை நினைத்தா காத்திருக்கிறாய்' என்கிறாள்.
அதற்கு நாயகி, 'நான் ஏன், அவனுக்காக காத்திருக்க வேண்டும்' என வெடுக்கென பேசியதும், தோழி சென்றுவிடுகிறாள். ஆனால், நாயகன் கிருஷ்ணன் வராததை நினைத்து தவிப்பதை, பக்குமவாய் எடுத்துரைத்தார் .
தொடர்ந்து, ஆனந்தபைரவி ராக, சித்துார் சுப்ரமணிய பிள்ளையின் ஜாவளி அரங்கேறியது. வெண்ணெயை மதுராபுரியில் விற்க செல்லும் கோபியர்களை வழிமறித்து விளையாடும் கண்ணனின் கதைகளமாய் அமைந்தது.
கோபியர்கள் கொஞ்சியும், கெஞ்சியும் கேட்டும் கண்ணன் வழிவிடவில் லை. அவன் கூறியதைபோல, ஒரு இடுப்பில் கண்ணனை துாக்கி, மறுபுற ம் பானைகளை துாக்கி செல்வதை, அபிநயத்தில் காண்பித்தது மனதை கவர்ந்தது.
ஆடல் அடவுகளை தாளத்திற்கு ஏற்ப ஆடுவது கோர்வை கணக்கு. அந்த வகையில் பெகாடி ராகத்தில், 'பஜ கோவிந்தம்' பாடலுக்கு, பல கணக்குகளை அவர் மாறி மாறி ஆடி அசரடித்தார். 'காசு சேர்ப்பது முக்கியமல்ல. நல்ல கர்மம் தான் முக்கியம் என்பதை விளக்கினார்.
பிரபல நாட்டிய கலைஞர் ஷோபனாவின் ஆடல் அமைப்பு மற்றும் நட்டுவாங்கத்துடன், பிரீத்தி மகேஷ் பாட்டு, பரத்வாஜ் மிருதங்கம், முத்துக்குமார் புல்லாங்குழலோடு, மயிலாப்பூர் பாரதீய வித்யாபவனில் தன் கச்சேரியை நிறைவு செய்தார்.
-மா.அன்புக்கரசி

