/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருவான்மியூர் - உத்தண்டி மேம்பால சாலை திட்டம் ரூ.2,100 கோடி பணியை துவக்கி வைத்தார் ஸ்டாலின்
/
திருவான்மியூர் - உத்தண்டி மேம்பால சாலை திட்டம் ரூ.2,100 கோடி பணியை துவக்கி வைத்தார் ஸ்டாலின்
திருவான்மியூர் - உத்தண்டி மேம்பால சாலை திட்டம் ரூ.2,100 கோடி பணியை துவக்கி வைத்தார் ஸ்டாலின்
திருவான்மியூர் - உத்தண்டி மேம்பால சாலை திட்டம் ரூ.2,100 கோடி பணியை துவக்கி வைத்தார் ஸ்டாலின்
ADDED : பிப் 27, 2026 05:31 AM

சென்னை: இ.சி.ஆரில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை, 2,100 கோடி ரூபாயில், 13.3 கி.மீ., நீள மேம்பால சாலை கட்டுமான பணியை, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார்.
சென்னையின் முக்கிய சாலையாக, இ.சி.ஆர்., உள்ளது. திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை வாகனத்தில் செல்ல, 45 நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரம் வரை ஆகிறது.
இதே துாரத்தை, 20 நிமிடங்களில் கடக்கும் வகையில், நான்கு வழி மேம்பால சாலை கட்ட, மாநில நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்தது.
அதன்படி, திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை, 2,100 கோடி ரூபாயில், 13.3 கி.மீ., நீளத்திற்கு மேம்பால சாலை கட்டப்பட உள்ளது. இதற்கான கட்டுமான பணியை, முதல்வர் ஸ்டாலின் நேற்று, திருவான்மியூரில் நேற்று நடந்த நிகழ்வில் துவக்கி வைத்தார்.
பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் கட்டப்படும் இந்த மேம்பால சாலை, 18 அடி உயரம், 56 அடி அகலத்தில், நான்கு வழி சாலையாக அமைகிறது.
நீலாங்கரை, அக்கரை பகுதியில் இருந்து ஏறவும், இறங்கவும் சாய்வு பாதை அமைக்கப்படும். எச்.ஏ.எம்., என்ற, 'ஹைப்ரிட் ஆன்யூட்டி மாடல்' என்ற தொழில்நுட்பத்தில் இந்த மேம்பால சாலை கட்டப்படுகிறது.
இதற்காக, எல்.பி., சாலை, நீலாங்கரை, அக்கரை பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யப்படும். கே.என்.ஆர்., நிறுவனம் கட்டும் இந்த மேம்பால சாலைக்கான கட்டுமான பணியை, மூன்று ஆண்டுகளில் முடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு, வேளச்சேரி தொகுதி காங்., - எம்.எல்.ஏ., ஹசன் மவுலானா, மண்டல குழு தலைவர் துரைராஜ், கவுன்சிலர்கள் ஆனந்தம், பாஸ்கரன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை செயலர் செல்வராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

