ADDED : செப் 23, 2026 06:13 PM
சென்னை: நெல்லையில் நடந்த மாநில பேட்மின்டன் போட்டியில், சென்னை வீரர் கவுதமை வீழ்த்தி, சிவகங்கையின் ஆசிம், ‘சாம்பியன்’ பட்டம் வென்றார்.
தமிழ்நாடு பேட்மின்டன் சங்கம் சார்பில், 11 வயதுக்கு உட்பட்ட மாணவ – மாணவியருக்கான மாநில பேட்மின்டன் போட்டி, நெல்லையில் நடந்தது.
தமிழகத்தைச் சேர்ந்த 200-க்கும் அதிகமான மாணவ – மாணவியர் போட்டியிட்டனர். இதில் சென்னையைச் சேர்ந்த 20 மாணவர்கள் பங்கேற்றனர்.
இதன் ஆடவர் பிரிவு இறுதி போட்டி நேற்று நடந்தது. இதில் சென்னையைச் சேர்ந்த கவுதம், 10, சிவகங்கையைச் சேர்ந்த ஆசிம், 10, மோதினர்.
இப்போட்டியில் ஆதிக்கம் செலுத்திய ஆசிம், முதல் செட்டை 15 – 9 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார். இரண்டாவது செட்டிலும் அதிரடியாக விளையாடிய ஆசிம், சென்னையின் கவுதமை 15 – 2 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி, அபார வெற்றி பெற்றார். இதன் மூலம் ஆசிம், சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
