ADDED : ஜன 30, 2026 05:09 AM
சென்னை: பள்ளிக்கல்வி துறையின் மாநில விளையாட்டு போட்டிகளில், சென்னை பள்ளிகளைச் சேர்ந்த மாணவ - மாணவியர் பல்வேறு பிரிவுகளில் பதக்கங்கள் வென்று அசத்தினர்.
பள்ளிக்கல்வித்துறையின் மாநில அளவிலான பாரதியார் தினம் மற்றும் குடியிரசு தின விளையாட்டு போட்டிகள், பல்வேறு மாவட்டங்களில் கடந்த 22ல் துவங்கி 25ம் தேதி வரை நடந்தது.
இதில், மதுரையில் நடந்த மாணவியருக்கான ஸ்குவாஷ் போட்டியில் 17 வயதிற்கு உட்பட்ட பிரிவில், வள்ளுவர்கோட்டம் வித்யோதயா பள்ளியின் சங்கமிதா முதலிடத்தையும், இரட்டையரில் சங்கமிதா - சக்தி பிரியா வெள்ளி பதக்கங்களையும் வென்று, பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். இரட்டையர் 19 வயதில் தி.நகர் ஜி.ஆர்.டி., பள்ளியின் அனன்யா மற்றும் கீர்த்தனா முதலிடத்தையும் பிடித்தனர்.
மாணவர் பிரிவில், 17 வயதில் எழும்பூர் டான்போஸ்கோ லோகேஷ் தங்கமும், இரட்டையர் பிரிவில் அதேபள்ளியின் இஜாஸ் அகமது மற்றும் ஜாத் ஆகியேர் தங்கமும் கைப்பற்றினர்.
மேலும் காஞ்சிபுரத்தில் நடந்த மாணவியருக்கான வாள்வீச்சு போட்டியில், சென்னை மாணவியர் பல்வேறு பிரிவுகளில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என பதக்கங்கள் வென்று அசத்தினர்.
