/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கலப்பட மணல் தயாரிக்க கல்குட்டை தண்ணீர் திருட்டு
/
கலப்பட மணல் தயாரிக்க கல்குட்டை தண்ணீர் திருட்டு
ADDED : பிப் 01, 2024 12:09 AM
பம்மல், செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் தாலுகா பம்மல், சர்வே எண்: 144/1ல் செங்கழுநீர்மலை உள்ளது. இங்குள்ள, 300 அடி ஆழமுடைய கல்குட்டையில், எப்போதும் தண்ணீர் தேங்கியிருக்கும்.
தாம்பரம் மாநகராட்சியில் இந்த கல்குட்டை தண்ணீரை சுத்திகரிப்பு செய்து, மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.
இதற்காக, கல்குட்டையின் மேற்பகுதியில், 6.40 கோடி ரூபாய் செலவில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த சிலர், கல்குட்டையில் தேங்கியுள்ள தண்ணீரை எடுத்து, கலப்பட மணலை சுத்தப்படுத்தி விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பம்மலில், கலப்பட மணல் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. பெரிய கட்டடங்கள் கட்ட தோண்டப்படும் மண்ணை, இக்கல்குவாரிக்கு எடுத்து வந்து, அவற்றின் மீது தண்ணீரை பீய்ச்சி அடிக்கின்றனர்.
அதன் ஈரத்தன்மையுடன், செய்யாறு, வந்தவாசி பகுதிகளில் இருந்து ஆற்று மணல் போன்ற எம் - சாண்டு எடுத்து வந்து கலக்கின்றனர். இதனால், பார்ப்பதற்கு ஆற்று மணல் போல் மாறி விடுகிறது. இந்த கலப்பட மணலை, லோடு 50,000 முதல் 70,000 ரூபாய் வரை விற்கின்றனர்.
இதற்கு, தனியாருக்கு எப்படி மின் இணைப்பு வழங்கப்பட்டது என தெரியவில்லை. இப்பிரச்னைக்கு, தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.