/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கார்கில் நகரில் அமைக்கப்பட்டுள்ள குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை
/
கார்கில் நகரில் அமைக்கப்பட்டுள்ள குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை
கார்கில் நகரில் அமைக்கப்பட்டுள்ள குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை
கார்கில் நகரில் அமைக்கப்பட்டுள்ள குளத்தில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை
ADDED : அக் 27, 2025 03:00 AM

திருவொற்றியூர்: கார்கில் நகரில் புதிதாக கட்டமைக்கப்பட்ட குளம் நிரம்பும் தருவாயில் உள்ளது. கழிவுநீர் கலப்பதால், குளத்திற்கான வரத்து வடிகால்வாயின் மதகு மூடப்பட்டுள்ளது.
திருவொற்றியூர் மண்டலம் ஆறு மற்றும் ஏழாவது வார்டிற்குட்பட்ட கார்கில் நகரின் 15 ஏக்கர் பரப்பிலான கழிவெளி நிலத்தின், ஐந்து ஏக்கர் பரப்பளவிலான இடத்தில், 130 கோடி ரூபாய் செலவில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால், 1,200 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன.
மீதமுள்ள, 10 ஏக்கர் நிலத்தில், கொசஸ்தலை வடிநிலத் திட்டத்தின் கீழ், ஆசிய வளர்ச்சி வங்கி நிதியான, 10 கோடி ரூபாய் செலவில், 330 அடி நீளம், 155 அடி அகலம், 11.5 அடி ஆழத்தில், 5.5 கோடி லிட்டர் கொள்ளளவு உடைய குளம் மற்றும் 1.75 லட்சம் லிட்டர் கொள்ளளவு உடைய நீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
குளத்தின் மழைநீர் வரத்து வடிகால்வாய் உள்ள கார்கில் நகர் பிரதான சாலை பகுதியில் குளத்தின் கரைகள் உயரமாகவும், எதிர்புறம் நீர் உந்து நிலையம் பக்கமாக உள்ள கரை, சற்று தாழ்வாகவும் அமைக்கப்பட்டுள்ளன.
இதனால் ,குளம் நிரம்பும் பட்சத்தில் உபரி நீர் வழிந்தோடி, நீர் உந்து நிலையம் தொட்டியின் மூன்று பக்கம் உள்ள இரும்பு ஜல்லடை வழியாக தொட்டிக்குள் சேகரமாகும். அங்கிருந்து, ராட்சத மோட்டர்கள் மூலம் பகிங்ஹாம் கால்வாய்க்கு கடத்தப்படும்.
தற்போது, குளத்தில், 70 - 80 சதவீதம் தண்ணீர் உள்ளது. இதனிடையே மழை விடும் நேரங்களில், வரத்து வடிகால் வழியாக கழிவுநீர் குளத்திற்கு வருகிறது.
அதை தடுக்க, கார்கில் நகர் பிரதான சாலையில் உள்ள குளத்திற்கான மழைநீர் வரத்து வடிகால் ராட்சத மதகால் மூடப்பட்டு, மாற்றுப்பாதை வழியாக கழிவுநீரை பகிங்ஹாமிற்கு கடத்தும் பணியில், மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
காத்திருக்கும் ஆபத்து கார்கில் நகரில் அமைக்கப்பட்டுள்ள புது குளத்தை சரிவர கையாளாமல் விட்டால், மேற்கு பகுதி முழுதும் வெள்ளத்தால், பாதிக்கக் கூடும். குளம் நிரம்பி தாழ்வான கரை வழியாக, உபரி நீர் வெளியேறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. உபரி நீர் வெளியேறும் பகுதியில், பலமில்லாத கரையில் உடைப்பு ஏற்படலாம். வடிகால் பாதையும் சரியாக இல்லை. அதிகாரிகள் கவனமாக செயல்பட வேண்டும். இல்லாவிடில், பேராபத்து ஏற்படலாம். - கே.கார்த்திக், 7வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர்.

