/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
உலா வரும் முதலைகள்பெருங்களத்தூரில் பீதி
/
உலா வரும் முதலைகள்பெருங்களத்தூரில் பீதி
ADDED : ஜன 07, 2024 12:34 AM
பெருங்களத்துார், வண்டலுார் உயிரியல் பூங்காவை ஒட்டி சதானந்தபுரம், நெடுங்குன்றம் ஏரிகள் உள்ளன. பூங்கா கூண்டுகளில் உலா வந்த முதலை குட்டிகளை, பறவைகள் துாக்கி செல்லும்போது இந்த ஏரிகளில் விழுந்துள்ளதாகவும் நாளடைவில் பெருகியதாவும் தெரிகிறது.
மேற்கண்ட ஏரிகளில், தற்போது ஏகப்பட்ட முதலைகள் காணப்படுகின்றன. அவை அடிக்கடி ஏரிகளில் இருந்து வெளியேறி, குடியிருப்புகளிலும், சாலைகளிலும் நடமாடுவதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.
கடந்த மாதம் 13ம் தேதி, ஆலப்பாக்கம் - மப்பேடு சாலையில், 7 அடி முதலை படுத்திருந்தது. அதை வனத்துறையினர் பிடித்து சென்றனர். சில நாட்களுக்கு முன், ஆலப்பாக்கம் அருகே 2.5 அடி முதலை குட்டி ஒன்று படுத்திருந்தது. அதையும் வனத்துறையினர் பிடித்து சென்றனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம், ஆலப்பாக்கம் - மப்பேடு சாலையில், சிலர் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது, ஒரு பெரிய முதலை, இரண்டு சிறிய முதலைகள் சாலையை கடந்து, அங்குள்ள கால்வாயில் சென்றது.
இதை பார்த்து, அவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இத்தகவல், அப்பகுதி முழுதும் பரவியதால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
சதானந்தபுரம், ஆலப்பாக்கம் பகுதிகளில் முதலை நடமாட்டம் அதிகரித்துள்ளதால், வனத்துறை அதிகாரிகள், அங்கு முகாமிட்டு, குடியிருப்பு, சாலை, கால்வாய்களில் சுற்றித்திரியும் முதலைகளை முழுதுமாக பிடிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.