UPDATED : அக் 26, 2026 06:11 PM
ADDED : அக் 26, 2026 06:06 PM
மாதவரம்: பெற்றோர் பாகுபாடு காட்டுவதாக மன வருத்தம் அடைந்த மாணவி, உடற்பயிற்சி பயிற்சியாளருக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு, அடுக்குமாடி குடியிருப்பின் 13வது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்டார்.
மாதவரம், பொன்னியம்மன்மேடு, ஜி.என்.டி. சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் பிஜய்குமார். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இளைய மகள் பாலக், 14, சூரப்பட்டு அருகே உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இவர், தன் பெற்றோர் அண்ணனை நன்றாக கவனிப்பதாகவும், தன்னை ஏளனமாக பார்ப்பதாகவும் மன வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று தன் உடற்பயிற்சி பயிற்சியாளருக்கு, ‘நான் சாகப் போகிறேன்’ என மொபைல் போனில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். தொடர்ந்து, குடியிருப்பின் 13வது மாடிக்கு சென்ற அவர், மொட்டை மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில், பலத்த காயமடைந்த மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த மாதவரம் போலீசார், மாணவியின் உடலை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவியின் பெற்றோர் மற்றும் உடற்பயிற்சி பயிற்சியாளரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
