/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அறிவியல் கண்காட்சியில் மாணவ - மாணவியர் அசத்தல்
/
அறிவியல் கண்காட்சியில் மாணவ - மாணவியர் அசத்தல்
ADDED : ஜூன் 28, 2025 04:09 AM

திருவொற்றியூர்:திருவொற்றியூர் கவிபாரதி வித்யாலயா பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியில், பல்வேறு படைப்புகளை காட்சிப்படுத்தி மாணவ - மாணவியர் அசத்தினர்.
திருவொற்றியூர், கவிபாரதி வித்யாலயா பள்ளியில், நேற்றும் இன்றும் அறிவியல் கண்காட்சி நடக்கிறது. பள்ளியில் படிக்கும், 1,200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் தனியாகவும், குழுவாகவும் தங்கள் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனர்.
இதில், ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள், கிரிநாத் - தனுஷ் கிருஷ்ணன் ஆகியோர், 'இயற்கையின் ஸ்பரிசம்' என்ற தலைப்பில், ரசாயன பொருட்கள் பயன்பாட்டால் விளையும் தீமை, இயற்கை பொருட்களை பயன்படுத்துவன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கினர்.
ஆறாம் வகுப்பு மாணவி சுருதிகா, அட்டை பெட்டிகளால் தயார் செய்யப்பட்டிருந்த நடமாடும் ரோபோட் குறித்து செயல்முறை விளக்கம் அளித்தார்.
மாணவர்கள் மாதவ் - ஓம் அஸ்வத் ஆகியோர், 'ஏவுகணையின் வேகமும்; மிதிவண்டியின் மேன்மையும்' என்ற தலைப்பில், ராக்கெட் மாதிரிகளை காட்சிப்படுத்தி விளக்கினர்.
ஐந்தடி நீள குழாயில் 'பெரிஸ்கோப்' எனும் 'மறைபுற நோக்கி' கருவி உருவாக்கி ஏழாம் வகுப்பு மாணவர்கள் தக் ஷன் - நியாட் ஆகியோர் விளக்கமளித்தனர்.
இந்த கருவிகள் பதுங்கு குழிகள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களில் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மாணவ - மாணவியர் மற்றும் பெற்றோர் அறிவியல் கண்காட்சியை கண்டு வியந்தனர். இதில், பள்ளி தாளாளர் ஏ.டி.பி.போஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.