ADDED : ஜன 09, 2026 05:42 AM

'சாங்கர சாரதம்' எனும் தலைப்பில் ஆதிசங்கர பகவத் பாதாலையும், சிருங்கேரி சாரதா தேவியையும் போற்றும் விதமாக சுபஸ்ரீ சசீதரனின் நாட்டிய நிகழ்ச்சி, ஆழ்வார்பேட்டை எத்திராஜ் கல்யாண மண்டபத்தில் நடந்தது.
ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடத்தைப் பற்றியும், அங்கு 'தக்ஷினாம் நாய சாரதா தேவியாக வீற்று அருள்புரியும் அம்பாளையும், எவ்வாறு சங்கரர் சிருங்கேரி வந்தடைந்தார் என்பதையும், எளிய கதையாக அடவுகளில் தெளியப்படுத்தினார்.
தவிர, ஆதி சங்கரருக்கும் மண்டல மிஸ்ரருக்கும் இடையில் நடந்த பெரும் வாதத்தையும், சங்கரருக்கும் சாரதா தேவிக்கும் நடந்த உரையாடலையும், தேவியை போற்றி வழிவழியாக வரும் பீடாதிபதிகளையும் தேவி ரூபமாகவே காண்பதையும் ஆராய்ந்து, அனைவருக்கும் நடனத்தின் வழியே எடுத்துக்கூறி அசரடித்தார்.
'ஸ்ரீ சங்கரா சார்ய வர்யம், ரிஷ்ய சிருங்க ஸ்துதி, சாரதே கருணாநிதே, போலே ஜெய் பஜன்' போன்ற ஸ்லோகங்கள் மற்றும் பாடல்களோடு விளக்கினார்.
சிருங் கேரி பீடத்தின் ஆஸ்தான வித்வான் ஸ்ரீராம்குமாரின் இசையமைப்பில், அஷிஷ் - நட்டுவாங்கம், ஜெனனி அம்சினி வாய்ப்பாட்டு, சன்னத் பரமேஸ்வரன் - மிருதங்கம், ஆதித்யா - வயலின், சாய் ஹரிணி - வீணை ஆ கியோரின் பக்க இசையோடு, சிருங்கேரி சாரதா பீடத்தின் தனித்துவங்களை தன் நாட்டியம் வழியே நிலைநாட்டிய சுபஸ்ரீக்கு, மிக்க வாழ்த்துகள்.
-மா.அன்புக்கரசி

