/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காசிமேடில் தரமற்ற மீன்கள் விற்பனை? அதிர்ச்சி! மோசடியை தடுக்க மீனவர்கள் வலியுறுத்தல்
/
காசிமேடில் தரமற்ற மீன்கள் விற்பனை? அதிர்ச்சி! மோசடியை தடுக்க மீனவர்கள் வலியுறுத்தல்
காசிமேடில் தரமற்ற மீன்கள் விற்பனை? அதிர்ச்சி! மோசடியை தடுக்க மீனவர்கள் வலியுறுத்தல்
காசிமேடில் தரமற்ற மீன்கள் விற்பனை? அதிர்ச்சி! மோசடியை தடுக்க மீனவர்கள் வலியுறுத்தல்
ADDED : ஜன 24, 2025 11:53 PM

சென்னை :மக்கள் ஆர்வமுடன் குவியும் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், உள்ளூர் மீன்களுடன், தரமற்ற, ரசாயனம் பூசப்பட்ட, வெளி மாநில மீன்கள் கலந்து விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மோசடியில் ஈடுபடும் கும்பலை தடுக்க வேண்டும் என, காசிமேடு மீனவர்கள், மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 3,000 பைபர் படகுகள் மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த துறைமுகம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த, மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரமாகவும் இருந்து வருகிறது.
காசிமேடு துறைமுகத்தில் அதிகாலையிலேயே மக்கள் கூட்டம் அலைமோதும். மொத்த மற்றும் சில்லரை வியாபாரிகள், சுடச்சுட கிடைப்பது போல், படகுகளில் இருந்து இறக்கப்படும் மீன்களை அங்கிருந்தே வாங்கிச் செல்வர்.
விலை அதிகம் என்றாலும், அங்கு கிடைக்கும் வஞ்சிரம் மீனுக்கு மவுசு அதிகம்.
பிடித்த சில மணி நேரங்களிலேயே கிடைப்பதால், காசிமேடு மீனின் சுவையே தனி தான் என, மீன் பிரியர்களும் வாங்கிச்செல்வர். ஆனால், இந்த மீன்களுடனும் வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட நொந்து போன மீன்கள் கலந்து விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சில தினங்களுக்கு முன், சென்னை காசிமேடு துறைமுகத்திற்கு வெளியில் இருந்து மீன் ஏற்றி வந்த லாரியை, காசிமேடு சிறிய விசைப்படகு உரிமையாளர் சங்கத்தினர் மடக்கி சோதனை செய்தனர்.
அந்த லாரியில், தரமற்ற, துர்நாற்றத்துடன் கடம்பா உள்ளிட்ட மீன்கள் இருந்தன. காசிமேடு துறைமுக மீன்களுடன் கலந்து விற்பதற்காக, வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து எடுத்து வரப்பட்ட மீன்கள் என்பது தெரியவந்தது.
இது குறித்து, காசிமேடு விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் விஜேஷ் கூறியதாவது:
காசிமேடு மீன்பிடி துறைமுகம் வழியாக நாங்கள் பிடித்து வரும் மீன்களை விற்கத்தான், காசிமேடில் மொத்த வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கி தரப்பட்டுள்ளது.
சிலர் இங்குள்ள மீன்களை வாங்கி விற்காமல், வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து தரமற்ற, ரசாயனம் பூசப்பட்ட மீன்களை வாங்கி விற்கின்றனர்.
மேலும், சிலர் எங்களிடம் வாங்கும் மீன்களுடன், அந்த மீன்களையும் கலப்படம் செய்து விடுகின்றனர்.
இப்படி வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து லாரிகளில் எடுத்து வரப்படும் தரமற்ற மீன்களை, காசிமேடு துறைமுகத்தில் இறக்கி, அந்த மீன்கள், இந்த துறைமுகத்தில் தான் பிடிக்கப்பட்டது என, சில்லரை வியாபாரிகளை நம்ப வைத்து, அவர்களின் தலையில் கட்டி விடுகின்றனர்.
ரசாயனம் கலந்த மீன்களை, காசிமேடு துறைமுகத்தில் வைத்தே சுத்தம் செய்து, துர்நாற்றம் மிக்க அதன் கழிவுகளை கடலில் வீசுகின்றனர். இதனால், கடல் நீர் அசுத்தமாகி, அதில், இறங்கி வேலை செய்யும் மீனவர்கள் மற்றும் மின் தொழில் சார்ந்த பணியாளர்களுக்கு, சரும பிரச்னைகள் ஏற்பட்டு அவதிக்கு உள்ளாகின்றனர்.
கெட்டுப்போன மீன்களை பதப்படுத்தி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். இந்த மோசடி குறித்து, காசிமேடு மீன்வளத்துறை அலுவலகத்தில், உதவி இயக்குனரிடம் புகார் அளித்தோம்; நடவடிக்கை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
'வாட்ஸாப்'பில்
புகார் தரலாம்!
மீன் உணவு உடலுக்கு வலு சேர்க்கக்கூடியது. ஆனால், கெட்டுப்போன மீனில் ரசாயனம் கலந்து விற்பதால், அவை உடலுக்கு தீங்கை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, தோல் வியாதி, வயிற்று போக்கு, புற்றுநோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.
தரமற்ற மீன்கள் விற்போர் குறித்து, 94440 42322 என்ற 'வாட்ஸாப்' எண்ணில் புகார் அளிக்கலாம்.
மீன் வாங்கும்போது, அதிக துர்நாற்றம் அல்லது புளிப்பு வாசனை இல்லை என்பதை உறுதி செய்வது நல்லது. மீனின் கண்கள் பளபளப்பாக இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். கண்கள் இருளாக இருந்தால் தவிர்ப்பது நல்லது.
மீன் செதில் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறமாக இருக்க வேண்டும். அழுத்தும்போது திடமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். புதிய மீனின் தோல் இறுக்கமாக மற்றும் செதில் அமைப்பை கொண்டிருக்கும். இதுபோன்ற பல்வேறு வகைகளில், மீனின் தரத்தை உறுதி செய்து மக்கள் வாங்கலாம்.
- உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்.