பெரம்பூர் பல்லவன் சாலையில் திடீரென உள்வாங்கி பள்ளம்
பெரம்பூர் பல்லவன் சாலையில் திடீரென உள்வாங்கி பள்ளம்
ADDED : செப் 24, 2026 06:41 PM

பெரம்பூர்: மெட்ரோ ரயில் பாதை கட்டுமான பணி நடந்துவரும் இடத்தின் அருகே, பெரம்பூர் பல்லவன் சாலையில் திடீரென பள்ளம் விழுந்தது.
சென்னையில் இரண்டாம் கட்டமாக, மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதில், மாதவரம் – சிறுசேரி வரையிலான தடத்தில் பாதை அமைக்கும் பணியால் அழுத்தம் ஏற்பட்டு, பெரம்பூர் –- மாதவரம் நெடுஞ்சாலை, பல்லவன் சாலை சந்திப்பில் நேற்று முன்தினம், திடீரென பள்ளம் விழுந்தது.
இரண்டு அடிக்கு நீளமாக பள்ளம் விழுந்திருந்தாலும் சாலைக்கு கீழே பெரிய அளவில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த செம்பியம் போக்குவரத்து போலீஸ்காரர் மணிகண்டன், பள்ளத்தைச் சுற்றி தடுப்புகள் அமைத்தார்.
பேருந்து அல்லது லாரி சென்றிருந்தால், பள்ளம் பெரிதாகி, பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். மாநகராட்சி மற்றும் மெட்ரோ ரயில் கட்டுமான பணியாளர்கள், பள்ளத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
* கே.கே.நகர், நெசப்பாக்கம் பகுதி பஜார் தெரு சாலையில், ஏராளமான வணிக கடைகள் செயல்பட்டு வருகின்றன. வாகன போக்குவரத்து நிறைந்த இந்த சாலை, திடீரென உள்வாங்குவதால், வாகன ஓட்டிகள் பரிதவித்து வருகின்றனர். சாலை உள்வாங்கிய இடத்தில், தற்காலிக நடவடிக்கையாக மண் கொட்டப்பட்டு உள்ளது.
சாலையின் அடியில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதா அல்லது குடிநீர், கழிவுநீர் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கசிவு காரணமாக சாலை உள்வாங்கி உள்ளதா என, அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
