/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திடீர் மின் தடையால் முடங்கியது சென்னை; துணை மின் நிலையங்கள் பழுதால் சிக்கல்
/
திடீர் மின் தடையால் முடங்கியது சென்னை; துணை மின் நிலையங்கள் பழுதால் சிக்கல்
திடீர் மின் தடையால் முடங்கியது சென்னை; துணை மின் நிலையங்கள் பழுதால் சிக்கல்
திடீர் மின் தடையால் முடங்கியது சென்னை; துணை மின் நிலையங்கள் பழுதால் சிக்கல்
UPDATED : மே 18, 2024 06:25 AM
ADDED : மே 17, 2024 11:55 PM

வட சென்னை அனல் மின் நிலையம் - தண்டையார்பேட்டை - பேசின்பிரிட்ஜ் துணை மின் நிலையங்கள் இடையிலான வழித்தடங்களில், நேற்று காலை பழுது ஏற்பட்டது. இதனால், சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.
சென்னை அடுத்த அத்திப்பட்டில், மின் வாரியத்தின் வட சென்னை அனல் மின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 210 மெகா வாட் திறனில் மூன்று அலகுகளின் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மின்சாரம், சென்னையின் மின் தேவையை பூர்த்தி செய்கிறது.
அதன்படி, வட சென்னை அனல் மின் நிலையத்தின் மின்சாரம், தண்டையார்பேட்டையில் உள்ள 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்திற்கு, இரு வழித்தடங்களில் எடுத்து வரப்படுகிறது. தவிர, ஸ்ரீபெரும்புதுாரின் 400 கி.வோ., துணை மின் நிலையத்திற்கும் மின்சாரம் செல்கிறது.
தண்டையார்பேட்டையில் இருந்து, பேசின்பிரிட்ஜ் மற்றும் புளியந்தோப்பில் உள்ள துணை மின் நிலையங்களுக்கு மின்சாரம் எடுத்து செல்லப்படுகிறது.
பேசின்பிரிட்ஜ் துணை மின் நிலையத்தில் இருந்து மணலி, மயிலாப்பூர், 230 கி.வோ., துணை மின் நிலையங்களுக்கு மின்சாரம் எடுத்து வரப்படுகிறது.
மேற்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து அம்பத்துார், பெரம்பூர், ராயபுரம், தண்டையார்பேட்டை, வியாசர்பாடி, புளியந்தோப்பு, பாடி, வில்லிவாக்கம், எழும்பூர், புரசைவாக்கம், மயிலாப்பூர் உட்பட பல பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், சென்னை மற்றும் அதை சுற்றிய மாவட்டங்களில், நேற்று அதிகாலை முதல் மழை பெய்தது.
இதனால், வட சென்னை மின் நிலையம் - ஸ்ரீபெரும்புதுார் வழித்தடத்தில் நேற்று அதிகாலை 3:00 மணிக்கு பழுது ஏற்பட்டது. அந்த வழித்தடத்தில் மின்சாரம் எடுத்து செல்வது தடைபட்டதால், வட சென்னையின் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது.
நேற்று காலை 9:00 மணி அளவில், வட சென்னை மின் நிலையம் - தண்டையார்பேட்டை - பேசின்பிரிட்ஜ் மின் வழித்தடங்களில் அடுத்தடுத்து பழுது ஏற்பட்டது.
எனவே, பேசின்பிரிட்ஜ் துணை மின் நிலையத்தில் இருந்து, மற்ற துணை மின் நிலையங்களுக்கு மின்சாரம் எடுத்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டதால், வட சென்னை மற்றும் மத்திய சென்னையின் பல பகுதிகளில் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது.
வட சென்னையில் வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, கொருக்குபேட்டை, ராயபுரம் பகுதிகளில் நேற்று காலை 9:15 மணி முதல் 11:15 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்பட்டது.
கொளத்துார், புத்தகரத்தில் அதிகாலை 3:00 மணிக்கு மின் தடை ஏற்பட்டது. திருவொற்றியூர், மணலி, எண்ணுார், மணலிபுதுநகர் உட்பட பெரும்பாலான பகுதிகளில், காலை 10:00 மணிக்கு மின் தடை ஏற்பட்டது.
அண்ணா நகர், அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனி, அமைந்தகரை, ஷெனாய் நகர் மற்றும் வில்லிவாக்கம் பகுதிகளில் காலை 10:00 மணி முதல் 11:00 மணி வரை மின் தடை ஏற்பட்டது.
அண்ணா சாலை, ராயப்பேட்டை, கோடம்பாக்கம், டிரஸ்ட்புரம், சூளைமேடு உள்ளிட்ட பகுதிகளில், காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை மின் தடை ஏற்பட்டது.
வழக்கமான மின் தடையாக இருக்கும் என நினைத்த நிலையில், ஒன்றரை மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது. மதிய வேளையிலும் அவ்வப்போது மின்சாரம் நிறுத்தப்பட்டது.
சென்னையில், இப்படி பல மணி நேரம் நீடித்த மின்வெட்டால், மக்கள் பெரிதும் அவதியுற்றனர். இதனால், புழுக்கத்தால் வீடுகளில் இருக்க முடியாமல் மக்கள் அவதியடைந்தனர்.
போக்குவரத்து சிக்னல்களை இயக்கவும் மின்சாரம் இல்லாததால், பல இடங்களில் வாகன ஓட்டிகள் தாறுமாறாக, விபத்து ஏற்படுத்தும் வகையில் சென்றனர்.
தவிர, திடீர் மின் தடையால் சிறு, குறு தொழிற்சாலைகள், மருந்தகங்கள், அரசு அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, அரசு அலுவலகங்களில் பல்வேறு சேவைகளுக்காக வந்தோர், மின் தடையால் விரக்தியடைந்தனர்.
மழையால் பாதிப்பு
கடும் வெயிலால், மின் சாதனங்கள் அதிக வெப்பத்துடன் இருந்தன. வட சென்னை மின்சாரம், மின் கோபுர வழித்தடங்களில் துணை மின் நிலையங்களுக்கு எடுத்து செல்லப்படுகிறது. திடீரென பெய்த மழையால், மின் வழித்தடங்களில் இருந்த, 'இன்சுலேட்டர்' சாதனங்களில் மழை தண்ணீரும், சாம்பல் கழிவுகளும் படர்ந்ததால் பழுது ஏற்பட்டது. சில மணி நேரங்களில் பழுது சரிசெய்யப்பட்டு, மின்சாரம் வழங்கப்பட்டது.
- சென்னை மின் பகிர்ந்தளிப்பு மைய பொறியாளர்
- நமது நிருபர் -

