/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சென்னையில் திடீர் மழை கொளுத்தும் வெயிலுக்கு இதம்
/
சென்னையில் திடீர் மழை கொளுத்தும் வெயிலுக்கு இதம்
ADDED : மே 05, 2025 04:08 AM

கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், நேற்று மாலை கருமேகங்கள் சூழ்ந்து, திடீரென பலத்த சூறைக்காற்று வீசியது.
வடசென்னை, பூந்தமல்லியில் வீசிய பலத்த காற்றால், சாலையோர கட்டடங்கள் மீது வைத்திருந்த விளம்பர பேனர்கள் கிழிந்து சாலையில் விழுந்தன. அதேபோல், ஆவடி, திருமுல்லைவாயில், திருநின்றவூர் மற்றும் திருவேற்காடு பகுதிகளில் வீசிய பலத்த காற்றில், ராட்சத பேனர்கள் கிழிந்து பறந்து விழுந்தன. அந்த நேரத்தில் வாகனங்கள் எதுவும் செல்லாததால், பெரியளவில் விபத்து நடக்கவில்லை.
தொடர்ந்து, அண்ணா சாலை, வடபழனி, குன்றத்துார், கிண்டி, அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரம் கன மழை பெய்தது. ஓ.எம்.ஆர்., - இ.சி.ஆர்., சாலைகளில் மழைநீர் தேங்கியது. குழாய், கேபிள் பதிப்பு, மழைநீர் வடிகால்வாய் பணிக்கு தோண்டிய பள்ளத்தில் வெள்ளம் தேங்கியதால், அந்த பகுதி சகதியாக மாறி, வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
திடீர் மழையால், திருவேற்காடு பகுதிகளில் 5:00 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், 50,000க்கும் மேற்பட்ட வீடுகள் இருளில் மூழ்கின. ராமாபுரத்தில் 3:30 மணி முதல் 6:30 மணி வரை மின்சாரம் இல்லாததால் பகுதிவாசிகள் அவதிப்பட்டனர். இந்த மழையால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.
- நமது நிருபர் -

