/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஓராண்டாக கட்டும் தரைப்பாலத்தால் அவதி மழைக்கு முன் பணியை முடிக்க சூளைமேடு மக்கள் எதிர்பார்ப்பு
/
ஓராண்டாக கட்டும் தரைப்பாலத்தால் அவதி மழைக்கு முன் பணியை முடிக்க சூளைமேடு மக்கள் எதிர்பார்ப்பு
ஓராண்டாக கட்டும் தரைப்பாலத்தால் அவதி மழைக்கு முன் பணியை முடிக்க சூளைமேடு மக்கள் எதிர்பார்ப்பு
ஓராண்டாக கட்டும் தரைப்பாலத்தால் அவதி மழைக்கு முன் பணியை முடிக்க சூளைமேடு மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 04, 2025 04:15 AM

அரும்பாக்கம்,:சூளைமேடு அருகில், ரயில்வே காலனி மூன்றாவது தெரு - மாதா கோவில் தெருவை இணைக்கும் தரைப்பால பணி, ஓராண்டாக நடந்து வருவதால், அப்பகுதிமக்கள் அவதியடைகின்றனர்.
அண்ணா நகர் மண்டலம், 107வது வார்டில், அரும்பாக்கம் அருகில் சூளைமேடு, மாதா கோவில் தெரு உள்ளது. இந்த தெருவைச் சுற்றியுள்ள எம்.எச்., காலனி, கலெக்டர் காலனி உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இங்குள்ள ரயில்வே காலனி மூன்றாவது தெரு - மாதா கோவில் தெரு மற்றும் அண்ணா நெடும்பாதையை இணைக்கும் பகுதியில், அரும்பாக்கம், அமைந்தகரை வழியாக விருகம்பாக்கம் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில், பகுதிமக்கள் கடப்பதற்கான 4 அடி அகலம் உடைய பழைய தரைப்பாலம் உள்ளது.
பாலம் 40 ஆண்டுகள் பழமையானது என்பதால், கனமழை வெள்ளத்தின்போது தரைப்பாலத்தின் இருபுறங்களில் இருந்த பக்கவாட்டு தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது.
புதிதாக பாலம் கட்ட அ.தி.மு.க., ஆட்சியில் 1.03 கோடி ரூபாய் ஒதுக்கி, பூமி பூஜை நடந்து, கிடப்பில் போடப்பட்டது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், அதே இடத்தில் புதிய பாலம் அமைக்க 1.86 கோடி ரூபாய் ஒதுக்கி, இரு ஆண்டுகளுக்கு முன் பூமி பூஜை போடப்பட்டது. ஆனால் பணிகள் துவங்கப்படவில்லை.
இதையடுத்து மூன்றாவது முறையாக மூலதன நிதியில் இருந்து 1.60 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, கடந்தாண்டு ஆக., 12ல், முதல்வர் ஸ்டாலின் தரைப்பாலம் அமைக்க அடிக்கல் நாட்டினார். அப்போது, கண்துடைப்புக்கு, தடுப்புச்சுவர் மட்டும் இடிக்கப்பட்டது; மற்ற எந்த பணிகளும் துவங்கவில்லை.
இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியான பின், கடந்த ஜனவரியில் பணிகள் துவங்கின. தற்போது வரை 60 சதவீத பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன. பணியை விரைந்து முடித்து, பாலத்தை திறக்க வேண்டும் என, அப்பகுதிமக்கள் தெரிவித்துள்ளனர்.
பகுதிமக்கள் கூறியதாவது:
ரயில்வே காலனி மூன்றாவது தெரு - மாதா கோவில் தெரு என இருவழியிலும், வாகனங்கள் சென்று வர முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.
சுற்றுவட்டார பகுதி மக்கள், அரும்பாக்கம், நெல்சன் மாணிக்கம் சாலை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல, பல மீட்டர் துாரம் சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் பள்ளி, கல்லுாரி மற்றும் பணிகளுக்கு செல்வோர் கடும் இன்னல்களை சந்திக்கின்றனர்.
எனவே, மாநகராட்சி அதிகாரிகள், ஆமை வேகத்தில் நடக்கும் பணிகளை, மழைக்கு முன் முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு மேம்பாலத்தை திறக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.