ADDED : மே 10, 2026 01:59 AM

தேனாம்பேட்டை: கோடை மழை நேற்று சென்னையை குளிர்வித்த நிலையில் தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பிரதான சாலைகள் மட்டுமின்றி உட்புற சாலைகளிலும் மழைநீர் தேங்கியதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
சென்னையில், நேற்று பெய்த மழையால் பிரதான சாலைகளிலும், உட்புற தெருக்களிலும் மழைநீர் தேங்கியது.
குறிப்பாக தேனாம்பேட்டை மண்டலம், சூளைமேடு பிரதான சாலை, ஜக்கிரியா காலனி, மேயர் சுந்தரராவ் சாலை, அண்ணா சாலை உள்ளிட்ட சாலைகளில், மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால், அவ்வழியாக வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சில இடங்களில், தேங்கிய மழைநீரை வெளியேற்ற, அப்பகுதி மக்களே மழைநீர் வடிகால்வாயின் மேன்ஹோலை திறந்தனர்.
நடைபாதையில் அமைக்கப்பட்ட மரங்களும், ஆங்காங்கே முறிந்து விழுந்தன. டாக்டர் பிரகாசம் சாலையில், நடைபாதையில் மரம் முறிந்து விழுந்ததை, மாநகராட்சியினர் அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
போக்குவரத்து பாதிக்கக்கூடாது என்பதற்காக, அப்பகுதி மக்களே ஒன்று சேர்ந்து, உடைந்து விழுந்த மரத்தை இழுத்து, சாலையோரமாக போட்டனர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும், மழைநீர் வடிகால்வாயை துார்வாருவதற்காக, பல கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. ஆனால், ஒதுக்கப்படும் பணத்தை முழுமையாக அதிகாரிகள் செலவு செய்யவில்லை என்பதற்கு, ஒவ்வொரு மழையின்போது வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சாலையில் தேங்கும் மழைநீரால் பாதிக்கப்படும்போது தெரிய வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
