/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலீசார் சண்டை: கண்காணிப்பாளர் 'சஸ்பெண்ட்'
/
போலீசார் சண்டை: கண்காணிப்பாளர் 'சஸ்பெண்ட்'
ADDED : பிப் 20, 2025 12:12 AM
சென்னை, எழும்பூர் பாந்தியன் சாலையில் உள்ள பழைய கமிஷனர் அலுவலகத்தில், கிழக்கு மண்டல இணை கமிஷனர் அலுவலகம் உள்ளது. இங்கு கண்காணிப்பாளராக பாண்டியராஜன், 57, என்பவர் பணியாற்றி வந்தார்.
இவர், பணியிட மாறுதல் வாங்கி தருவதாக கூறி, காவலர்களிடம் ஆயிரக்கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளார். இதையறிந்த இணை கமிஷனர் விஜயகுமார், கண்காணிப்பாளர் பாண்டியராஜனை, 'சஸ்பெண்ட்' செய்ததுடன், துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளவும், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, போலீஸ் அதிகாரி கூறியதாவது:
புதுப்பேட்டை ஆயுதப்படையில், மோட்டார் வாகனப்பிரிவில் ஓட்டுநராக பணிபுரிந்தவர் ரங்கநாதன், 39.
இவருடன் பணிபுரிந்த சுந்தர்ராஜன், 38, என்பவர், 'எனக்கு தெரிந்த போலீஸ் உயர் அதிகாரிகளிடம் சொல்லி, உங்களுக்கு மாமூல் அதிகம் வரும் நல்ல காவல் நிலையத்திற்கு பணி மாறுதல் பெற்றுத் தருகிறேன்' எனக்கூறி, சில ஆயிரங்களை கறந்துள்ளார்.
இதையடுத்து ரங்கநாதனுக்கு, திருவல்லிக்கேணி சட்டம் - ஒழுங்கு காவல் நிலையத்தில், ரோந்து பணியில் ஈடுபடும் ஜிப்சி வாகன ஓட்டுநராக பணியிட மாறுதல் கிடைத்தது.
இந்நிலையில், எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் ரங்கநாதனை, சக காவலர்களான சுந்தர்ராஜன், மணிபாபு, 30, ஆனந்த், 33, ஆகியோர் வழிமறித்து தாக்கினர்.
பணியிட மாறுதலுக்கு மேலும் சில ஆயிரங்களை கேட்டு தாக்கினர். இதில், ரங்கநாதனின் கால் எலும்பு முறிந்தது.
சாலையில் நடந்த இந்த அடிதடி குறித்து, உயர்மட்ட போலீசார் விசாரித்ததில், ரங்கநாதன் பணியிட மாறுதலுக்கு, இணை கமிஷனர் அலுவலக கண்காணிப்பாளர் பாண்டியராஜன், சில ஆயிரம் ரூபாயை லஞ்சமாக வாங்கியதும், அடிதடி சண்டைக்கு காரணம் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து கண்காணிப்பாளரை, இணை கமிஷனர் சஸ்பெண்ட் செய்துள்ளார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

