/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கிடப்பில் போடப்பட்ட தி.நகர் இரும்பு பாலம் அம்போ?
/
கிடப்பில் போடப்பட்ட தி.நகர் இரும்பு பாலம் அம்போ?
ADDED : ஏப் 23, 2024 12:17 PM

தி.நகர்: வர்த்தக பகுதிகளில் ஒன்றான தி.நகரில் ஏற்படும் நெரிசலை குறைக்க, 131 கோடி ரூபாயில் துவங்கப்பட்ட இரும்பு மேம்பால பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது. மூன்றாம் கட்ட பணிக்கான அனுமதி வழங்காமல், போக்குவரத்து போலீசார் இழுத்தடிப்பதால், பணிகளை முடிக்க முடியாமல் மாநகராட்சி திணறுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் நெரிசலில் சிக்குவதும், வியாபாரமின்றி கடைக்காரர்கள் பாதிக்கப்படுவதும் தொடர்கிறது.
சென்னையில் நிலவும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று போக்குவரத்து நெரிசல். வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, நகரின் முக்கிய பகுதிகளில் போதிய கட்டமைப்பு இல்லாததால், வாகன நெரிசல் தவிர்க்க முடியாததாக மாறியுள்ளது.
இந்நிலையில், நகரின் பல இடங்களில் மெட்ரோ ரயில் பாதை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட பணிகள், பாதி சாலையை அடைத்து நடப்பதால், வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
இதில், சென்னையின் வர்த்தக பகுதிகளில் ஒன்றான தி.நகரில் ஏற்படும் நெரிசலை குறைக்க, தி.நகர் உஸ்மான் சாலையில் இருந்து அண்ணா சாலை வரை புதிய மேம்பாலம் அமைக்க, மாநகராட்சி திட்டமிட்டது.
இது குறித்து, 2021 - 22 சட்டசபை நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, 2023 மார்ச் மாதம் பணிகள் துவக்கப்பட்டன.
இரும்பு மேம்பாலமாக அமைக்க திட்டமிட்ட மாநகராட்சியின் மேம்பால துறை, மூன்று கட்டங்களாக அப்பணிகளை பிரித்து கொண்டது. மொத்தம் 131 கோடி ரூபாய் மதிப்பில், 50 துாண்களுடன் 7.5 மீட்டர் அகலம் உடைய இருவழிப் பாதையாக அமைய உள்ளது.
இதில், தெற்கு மேற்கு போக் சாலை சந்திப்பில் இருந்து, சி.ஐ.டி., நகர், நான்காவது பிரதான சாலை சந்திப்பு வரை முதல் கட்டமாக அமைக்க முடிவானது.
தெற்கு மேற்கு போக் சாலை சந்திப்பில் இருந்து பர்கிட் சாலை சந்திப்பு வரை, 465 மீட்டர் துாரத்திற்கு இரண்டாம் கட்டமாகவும், அதேபோல், பர்கிட் சாலை சந்திப்பில் இருந்து பழைய உஸ்மான் சாலை மேம்பாலம் வரை, மூன்றாம் கட்ட பணிகள் மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டிருந்தது.
இதில், 320 மீட்டர் நீளமுடைய முதல் கட்ட பணிகள் முடிந்துள்ளன. இரண்டாம் கட்ட பணிகள் நடந்து வருகின்றன. 420 மீட்டர் துாரத்திற்கு மூன்றாம் கட்ட பணிக்கு அனுமதி வழங்குவதில் போலீசார் இழுத்தடிப்பு தொடர்கிறது.
தி.நகர், துரைசாமி சாலை -- உஸ்மான் சாலை சந்திப்பில் உள்ள மேம்பாலத்தின் தெற்கு பகுதி சாய்தளத்தை, ஜி.ஆர்.டி., ஜுவல்லரி அருகே தகர்த்து, அங்கிருந்து தெற்கு உஸ்மான் சாலை வழியாக அண்ணா சாலை சந்திப்பு வரை, 1.2 கி.மீ., துாரத்திற்கு மேம்பாலம் அமைய உள்ளது.
இதில், தி.நகர் எம்.எல்.ஏ., அலுவலகம் அருகே, மேம்பாலத்தில் இருந்து தி.நகர் பேருந்து நிலையத்திற்கு வாகனங்கள் இறங்கவும், அதற்கு எதிர் திசையில், மேம்பாலத்தில் வாகனங்கள் ஏறவும், வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
தி.நகர் நெரிசல் மிகுந்த பகுதி என்பதால், மேம்பால பணிகளை விரைந்து முடிக்க, இரும்பு மற்றும் கான்கிரீட் கலவை கலந்து, 'காம்போசைட் கர்டர்' முறையில் மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு முன், மேம்பால பணிகளை முடித்து, பயன்பாட்டிற்கு திறக்க திட்டமிடப்பட்டது. அதற்காக பணிகள் வேகவேகமாக மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து போலீசாரிடம் அனுமதி கேட்டு, கடந்த ஆண்டு டிசம்பரில், மாநகராட்சி சார்பில் கடிதம் வழங்கப்பட்டது.
ஆனால், மழை - வெள்ளம், பொங்கல் பண்டிகை, முதல்வர் வெளிநாடு பயணம், லோக்சபா தேர்தல் என, போலீசார் அனுமதி வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர். இதனால், வரும் தீபாவளிக்குள் முடிக்க வேண்டிய மேம்பால பணி, அடுத்து ஆண்டு பொங்கலுக்குள் முடியுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து போக்குவரத்து காவல் துறை கூடுதல் கமிஷனர் சுதாகர் கூறுகையில், ''பழைய மேம்பாலத்தை இடித்து, புது மேம்பால பணிகளை மேற்கொள்ளலாம் என, மாநகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். அவர்கள், முன்னேற்பாடு பணிகளை செய்து விட்டு, மேம்பால பணியை துவங்கலாம்,'' என்றார்.
மாநகராட்சி மேம்பால துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'எங்களுக்கு இன்னும் அதிகாரபூர்வமாக அனுமதி வழங்கப்படவில்லை' என, உறுதிபட தெரிவித்தனர்.

